என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல்லில் தக்காளியை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
- கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர்.
- வரலாறு காணாத வகையில் இந்தாண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் 1 கிலோ வாங்கும் இடத்தில் 100 கிராம், கால் கிலோ என வாங்கி வருகின்றனர். திண்டுக்கல் மார்க்கெட்டில் கடந்த 15 நாட்களாக ரூ.120 க்கு தக்காளி விற்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்து வந்த போதிலும் பல கடைகளில் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் காந்தி காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. தக்காளி வியாபாரியான சந்தோஷ் முத்து இது குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன் பொதுமக்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் குவியத் தொடங்கினர். திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த சந்தோஷ்முத்து காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சேவையுடன் அனைத்து தரப்பினரும் தக்காளியை வாங்கி பயன்படுத்தும் வகையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முன் வந்ததாக தெரிவித்தார். இதனை அறிந்த பொதுமக்கள் காலை 6 மணிக்கே கடையில் குவிந்தனர். வரிசையில் நின்று தக்காளியை ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
இது குறித்து தக்காளி வியாபாரி கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாக தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். வரலாறு காணாத வகையில் இந்தாண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெண்கள் சமையலில் தக்காளி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.120 க்கு விற்கப்படும் தக்காளியை பாதிக்கு பாதி குறைத்து ரூ.60க்கு விற்பனை செய்து வருகிறேன். தரமானதாக ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்து மக்களின் நலனுக்காக விலையை குறைத்து வழங்கி வருகிறேன். இன்று மாலை வரை தக்காளி விற்கப்படும் என்று தெரிவித்தார்.
இன்று மலிவு விலை தக்காளி பொதுமக்களுக்கு வழங்க 5 டன் வரவழைக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு வழங்கவில்லை.
கடைகளில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்கும் பொழுது அதே தரமான தக்காளியை ரூ.60க்கு கொடுப்பதால் கால் கிலோ, அரை கிலோ என வாங்க வந்த நாங்கள் மகிழ்ச்சியுடன் 2 கிலோ வாங்கி செல்கின்றோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.






