search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி: எடப்பாடி பழனிசாமி நள்ளிரவு வரை தீவிர ஆலோசனை
    X

    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி: எடப்பாடி பழனிசாமி நள்ளிரவு வரை தீவிர ஆலோசனை

    • கூட்டணியில் பிரதான கட்சிகள் ஏதும் தற்போதைய சூழலில் இடம் பெறாத நிலையில் பாராளுமன்றத் தேர்தல் களம் நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு சவாலானதாகவே இருக்கும்.
    • அ.தி.மு.க.விலும் தொகுதிகள் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றை ரகசியமாகவே மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

    தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பழைய கூட்டணி கட்சிகளில் புரட்சி பாரதம் கட்சி மட்டுமே நீடிக்கிறது. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எந்த முடிவையும் தெரிவிக்காமலேயே உள்ளனர்.

    கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த தேசிய கட்சியான பாரதிய ஜனதாவுடனான உறவையும் அ.தி.மு.க. முறித்துக் கொண்டது. எனவே வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியை வலுப்படுத்துவது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் எம்.பி. தொகுதிகளை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு ரகசிய திட்டங்களை வகுத்து வருகிறார்.

    கூட்டணியில் பிரதான கட்சிகள் ஏதும் தற்போதைய சூழலில் இடம் பெறாத நிலையில் பாராளுமன்றத் தேர்தல் களம் நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு சவாலானதாகவே இருக்கும். இருப்பினும் அதற்கேற்ப அவர் திட்டங்களை தீட்டி வருகிறார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, கட்சி பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

    தி.மு.க. கூட்டணியில் கூட்டணி தொடர்பாகவோ, தொகுதிகள் பற்றியோ எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமலேயே உள்ளது. எனவே, அ.தி.மு.க.விலும் தொகுதிகள் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றை ரகசியமாகவே மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.


    அதன் காரணமாகவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் எதையும் பகிரங்கமாக பேசவில்லை. ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு மாலையில் திருவாரூர், விருதுநகர் ஆகிய 2 மாவட்டச் செயலாளர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து எடப்பாடி பழனிசாமி தனியாக பேசி உள்ளார்.

    இந்த மாவட்டங்களில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பிரச்சனைகள் இருப்பதாகவும், அவைகளை தீர்க்கும் வகையில் 2 மாவட்டச் செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி உரிய அறிவுரைகளை வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பின்னர் இரவு 8 மணியளவில் கட்சியின் மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடனும் தனியாக ஆலோசனை நடத்தினர்.

    இந்த ஆலோசனை கூட்டம் நள்ளிரவு 11.30 மணி வரை நீடித்துள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

    பாராளுமன்றத் தேர்தலில் புதிதாக சிறுபான்மை கட்சிகளான எஸ்.டி.பி.ஐ. மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பது பற்றியும் புதிதாக அமைய உள்ள கூட்டணியால் ஏற்பட இருக்கும் சாதக, பாதகங்கள் பற்றியும் முன்னணி நிர்வாகிகளின் கருத்தை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது பற்றியும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    Next Story
    ×