search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்... சென்னையில் 3 தொகுதிகளை குறிவைக்கும் அ.தி.மு.க.
    X

    பாராளுமன்ற தேர்தல்... சென்னையில் 3 தொகுதிகளை குறிவைக்கும் அ.தி.மு.க.

    • தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
    • அனைத்து தொகுதிகளிலும் முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வலுவாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தேர்தல் களம் காண அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதால் சிறுபான்மை கட்சிகள் மற்றும் தி.மு.க.வுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றிருந்தது. பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன.

    இப்படி தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பல கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போதிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை கிடைக்கவில்லை.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் அ.தி. மு.க. கூட்டணி தோல்வியை தழுவி இருந்தது.

    இந்த நிலையில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கும் அ.தி.மு.க. பா.ஜனதாவுக்கு எதிரான மன நிலையில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.

    தற்போதைய சூழலில் அ.தி.மு.க. அணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவது என்பது அந்த கட்சிக்கு பெரிய சவாலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    சென்னையை பொறுத்தவரையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் தி.மு.க.வே வெற்றி பெற்றது.

    இந்த தொகுதிகளில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி மட்டுமே தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறலாம்.

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி 43 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் அ.தி.மு.க. வுக்கு 35 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில் வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளை ஒப்பிட்டு பார்த்தால் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது.

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு 56 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 27 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன.

    இதே போன்று வடசென்னை தொகுதியில் 53 சதவீத வாக்குகளை தி.மு.க. கூட்டணி பெற்றிருந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணிக்கோ 25 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது.

    இப்படி கூட்டணி கட்சிகள் இருந்த நிலையிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு குறைந்த அளவிலேயே கடந்த தேர்தலில் வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்ததே முக்கிய காரணம் என்றும் தற்போது பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இல்லாததால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் பாராளுமன்ற தேர்தலில் செயல்படுவோம் என்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, "சென்னையில் 3 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற வகையில் வியூகம் அமைத்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இதற்காக சென்னையில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை கையில் எடுத்து அதனை தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக மக்கள் மத்தியில் மீண்டும் மதிப்பை பெற்று பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை ஈட்ட முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவரும் வகையில் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். மூன்று தொகுதிகளிலும் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை கண்டறிந்து அதனை தீர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் அப்போதுதான் அவர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வெற்றி பெற முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.


    இப்படி சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளையும் குறிவைத்து அ.தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது. இது எந்த அளவுக்கு தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

    ஏனென்றால் தற்போதைய சூழலில் அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகளுமே இல்லாத நிலையே உள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் நிச்சயம் நிலைமை மாறும் என்றும் பெரிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் என்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி இது போன்று தமிழகம் முழுவதுமே யூகம் வைத்து வருகிறார். அனைத்து தொகுதிகளிலும் இதுபோன்று முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

    இது அ.தி.மு.க.வின் வெற்றிக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×