search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. தேர்தல் குழுக்கள் நாளை முதல்கட்ட ஆலோசனை... வேட்பாளர் தேர்வுக்கு தயாராகிறார்கள்
    X

    அ.தி.மு.க. தேர்தல் குழுக்கள் நாளை முதல்கட்ட ஆலோசனை... வேட்பாளர் தேர்வுக்கு தயாராகிறார்கள்

    • அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
    • அ.தி.மு.க.வில் தம்பி துரை தலைமையில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இடையே 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த எல்லா முக்கிய கட்சிகளும் குழுக்கள் அமைத்துள்ளன. இன்னும் சில தினங்களில் இந்த குழுக்கள் சந்தித்து பேச உள்ளன.

    அது போல வேட்பாளர் தேர்வும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. என்றாலும் அந்த கட்சி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகள் போன்றவற்றுக்காக 4 குழுக்களை அமைத்து உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி கண்காணிப்பில் செயல்பட உள்ள இந்த 4 குழுக்களும் நாளை (வியாழக்கிழமை) சென்னையில் கூட இருப்பதாக தெரிய வந்துள்ளது. 4 குழுக்களில் இடம்பெற்று இருப்பவர்களும் அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

    குறிப்பாக வேட்பாளர் தேர்வு பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.


    தொகுதி பங்கீடுக்காக கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பென்ஜமின் ஆகிய 5 பேர் குழுவை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி இருக்கிறார். நாளை இந்த குழு முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

    அதுபோல நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும் நாளை ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட பணிகள் குறித்து முடிவு செய்ய உள்ளது.

    அ.தி.மு.க.வில் தம்பி துரை தலைமையில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடவை பிரசாரத்தில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பற்றி இந்த தலைவர்களும் நாளை ஆலோசிக்க உள்ளனர்.

    பிரசாரத்தில் புதிய வியூகங்களை அமல்படுத்த இந்த குழு திட்டமிட உள்ளது. எனவே அ.தி.மு.க.வின் நாளைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×