search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்- வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்
    X

    சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்- வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

    • முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் வாய்ந்ததாகும்.

    காளையாக இருந்தாலும், காளையர்களாக இருந்தாலும் வீரத்தை மட்டுமின்றி அன்பையும், பாசத்தையும், விசுவாசத்தையும் மண்ணில் விதைக்கும் திருவிழாவாகவே இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் பொங்கல் தினமான நேற்று அவனியாபுரத்தை தொடர்ந்து, இன்று பாலமேட்டில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 1,000 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல் தகுதிபெற்ற 700 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டு இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. இந்த காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும். அவனியாபுரம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட போதிலும், அதிக அளவிலான காளைகள் பாலமேட்டில்தான் அவிழ்க்கப்படுகிறது. அதன்படி நன்கு பயிற்சி பெற்ற காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

    திமிலை உயர்த்தி கெத்து காட்டிய காளைகளின் அருகில் செல்லக்கூட அச்சப்பட்ட மாடுபிடி வீரர்கள் தடுப்புக்கட்டைகள் மீது ஏறி நின்று கொண்ட காட்சிகளையும் அவ்வப் போது காணமுடிந்தது. தில்லும், தெம்பும் இருந்தால் என்னை அடக்கிப்பார் என்று சீறியபடி காளைகள் களமாடியதை உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பார்த்து ரசித்தனர்.

    இதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. படுகாயம் அடையும் வீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தன.

    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடி படாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளைப் பெற்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் இரண்டாம் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கன்று குட்டியுடன் மாடு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் பைக் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு சமூக ஆர்வலர் பொன்குமார் சார்பில் காங்கேயம் மயிலை பசு மற்றும் கிடாரி கன்று குட்டி வழங்க உள்ளனர். சீறிப் பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம் முதல் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட் களை பரிசாக பெற்று சென்றனர்.

    காளைகளுக்கும், மாடு பிடி வீரக்ளுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டி ருந்தது.

    Next Story
    ×