search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு- இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு- இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்

    • பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் மனுதாக்கல் செய்துள்ளார்.
    • ஈபிஎஸ் தரப்பு நடத்தவுள்ள பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க கூடாது என மனு.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் கடந்த வாரம் ஒற்றை தலைமை கோஷத்தை திடீரென முன் வைத்தனர்.

    எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. தலைமை பதவிக்கு கொண்டு வரும் நோக்கத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அணி திரண்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் அனுமதி அளித்திருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பாதியிலேயே ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ள களம் இறங்கி உள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த அவர் தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று திடீரென மனு அளித்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வக்கீல் மனோஜ்பாண்டியன் தலைமையிலான வக்கீல்கள் குழுவினர் இந்த மனுவை அளித்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் வருமாறு:-

    நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறேன். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. விதிகளில் திருத்தம் செய்து பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வரும் நோக்கத்தில் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    எனவே 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்.

    பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை கட்சியின் அவைத் தலைவர் வெளியிட்டு உள்ளார். இதனை செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில் எந்தவித மாற்றத்தையும் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க கூடாது. அ.தி.மு.க. சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி திருத்தங்கள் செய்வது ஏற்கத்தக்கதல்ல என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தனக்கு எதிராக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்த மறுநாளே ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் அவசரம் அவசரமாக மனுதாக்கல் செய்திருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க. தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. தனது வக்கீல்கள் மூலமாக மனுவை அளித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்றும் முறையிட முடிவு செய்துள்ளார்.

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் அமர்வதற்கு காய் நகர்த்தி வரும் நிலையில் அதற்கு தடை போடும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

    நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி சென்னை ஐகோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் விரைவில் மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தூக்கியுள்ள இந்த 2 கவசங்களும் கட்சிக்குள் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

    Next Story
    ×