search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஒமைக்ரான் பிஏ 2.75 ரகம் புதிய வகை கொரோனா இந்தியாவில் உருவாகி உள்ளதா?- இஸ்ரேல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
    X

    ஒமைக்ரான் பிஏ 2.75 ரகம் புதிய வகை கொரோனா இந்தியாவில் உருவாகி உள்ளதா?- இஸ்ரேல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    • 2020-2021-ம் ஆண்டுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி திணரும் சூழ்நிலைக்கு உள்ளானது.
    • டெல்டா பிளஸ் வைரஸ் மனித குலத்தையே பந்தாடி விட்டது என்று சொல்லலாம்.

    கொரோனா தொற்று அச்சுறுத்தல் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவானபோது அது உலகையே முடக்கிப் போடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 2020-2021-ம் ஆண்டுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி திணரும் சூழ்நிலைக்கு உள்ளானது.

    இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரசில் ஏற்பட்ட பிறழ்வுகள்தான். கொரோனா வைரஸ் எத்தகைய தன்மையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே அது மாற ஆரம்பித்துவிட்டது.

    ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ் என்று கொரோனா மாறிக் கொண்டே இருந்தது. இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் டெல்டா பிளஸ் வைரஸ் மனித குலத்தையே பந்தாடி விட்டது என்று சொல்லலாம்.

    அதன்பிறகும், கொரோனாவின் தாகம் தீரவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி கொரோனா வைரஸ் பல்வேறு பிறழ்வுகளை சந்தித்து ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்துக்கு சென்றது. தென் ஆப்பிரிக்கா நாடுகளில் முதன் முதலாக ஒமைக்ரான் தாக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

    அது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியபோதே ஒமைக்ரான் 5 வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது தெரிந்தது. அதாவது பிஏ-1, பிஏ-2, பிஏ-3, பிஏ-4, பிஏ-5 ஆகிய 5 வகைகளாக ஒமைக்ரான் பரவியது. மிக குறுகிய காலத்திற்குள் உலகின் அனைத்து நாடுகளையும் ஒமைக்ரான் ஆக்கிரமித்தது.

    இதனால் ஏற்பட்ட மிகப்பெரிய நன்மை என்ன வென்றால் ஒமைக்ரான் ஆதிக்கம் பெருக பெருக டெல்டா பிளஸ் வைரசின் கொடூரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் வைரஸ்தான் ஆக்கிரமித்து இருக்கிறது.

    ஒமைக்ரான் வைரசாக கொரோனா மாறிய பிறகு அதன் ஆற்றல் குறைந்து போனது. பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும் அது மக்களை முடக்குவது மிக மிக குறைவாக உள்ளது. இதனால் ஒமைக்ரானை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது உலகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.

    இந்த நிலையில்தான் கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. தமிழகத்திலும் உஷாராக வேண்டிய நிலைக்கு செல்லும்படி கொரோனா துரத்திக்கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 15 ஆயிரத்துக்கு மேல் சென்றுவிட்டது. எனவே முகக்கவசமும், தடுப்பூசியும் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இந்தியாவில் மீண்டும் வேகம் எடுத்துள்ள ஒமைக்ரான் வைரஸ் பற்றி இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனாவின் புதிய வடிவமான பிஏ-2.75 என்ற வகை வைரஸ் நாடு முழுவதும் பரவி இருப்பதை கண்டுபிடித்தனர்.

    குறிப்பாக இந்தியாவில் 10 நகரங்களில் இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் மிக மிக அதிகளவு இருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், உத்தரபிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் புதிய வகை ஒமைக்ரான் இருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    இந்தியாவை தவிர இந்த புதிய வகை வைரஸ் மேலும் 7 நாடுகளில் பரவி இருப்பதை உலக சுகாதார மையம் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த புதிய பிஏ 2.75 வைரஸ் வேகம் எந்தளவுக்கு உள்ளது? அது மனிதர்களை தாக்கும்போது எத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது எவ்வளவு காலம் நீடிக்கும் ஆற்றலுடன் இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பிஏ2.75 வகை வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரவில்லை என்றும், அது இந்தியாவில் தான் உருவானது என்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள். ஆனால் இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சமீரன் பாண்டா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'கொரோனா வைரசில் பிறழ்வுகள் ஏற்படுவது தற்போது மிக மிக சகஜமான ஒன்றாக உள்ளது. அடிக்கடி கொரோனா வைரஸ் பிறழ்வு வந்து கொண்டே தான் இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை ஏற்க இயலாது' என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், 'இந்த புதிய வகை வைரசால்தான் தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்கிறதா? என்பதை யும் உறுதிபடுத்த இயலாது' என்று கூறி விட்டார்.

    இஸ்ரேல் விஞ்ஞானிகளின் அறிக்கையால் இந்திய விஞ்ஞானிகள் புதிய வைரஸ் குறித்த அடுத்தக் கட்ட ஆய்வை தொடங்கியுள்ளனர்.

    Next Story
    ×