என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல்- அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தேர்தல் கமிஷன் கடிதம் பெற ஓ.பி.எஸ் அணி முடிவு
- தமிழ்நாட்டில் 16-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஏற்பாடு செய்துள்ளார்.
- தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய முகவரிக்கு கடிதம் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்ப்பதற்காக பாராளுமன்ற தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது.
அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகளை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம் என்பதால் இந்த திட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் நாட்டில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியிடம் இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடந்த வாரம் கடிதம் அனுப்பி இருந்தது.
இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும் போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் 16-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஏற்பாடு செய்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் 16-ந்தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு தேசிய, மாநில கட்சிகளுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார்.
அதன்படி அ.தி.மு.க.வுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கடிதத்தை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாங்க வேண்டாம் என்று கூறியதால் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள ஊழியர்கள் கடிதத்தை வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
ஏனென்றால் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இப்போது கிடையாது என்பதால் அதை திருப்பி அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டபோது, "இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது" என்று விளக்கம் அளித்தார்.
அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதால் இந்த கடிதம் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சென்றடையவில்லை. காரணம் அவர் வேறு முகவரியில் வசித்து வருகிறார்.
இதனால் தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய முகவரிக்கு கடிதம் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமியிடமும் கடிதம் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்திடமும் தேர்தல் கமிஷனின் கடிதம் இல்லை.
எனவே 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எந்த அடிப்படையில் சென்று அ.தி.மு.க.வினர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் வா.புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அ.தி.முக. தலைமைக் கழகம் பொதுவானது. அது எங்களுக்கும் சொந்தமானது. நாங்கள் தகராறு வேண்டாம் என்பதால்தான் உள்ளே போகாமல் இருக்கிறோம்.
அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதம் எங்களுடைய முகவரிக்கு தான். ஆனால் அதை அங்குள்ளவர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பியது பெரிய தவறு.
தற்போது எங்களிடம் கடிதம் இல்லையென்றாலும், தேவைப்பட்டால் தேர்தல் கமிஷனில் முறையிட்டு அந்த கடிதத்தின் நகலை தலைமைச் செயலகம் சென்று பெற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வோம்.
இவ்வாறு புகழேந்தி கூறினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் இன்பதுரை கருத்து தெரிவிக்கையில், "இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு கடிதம் அனுப்புங்கள் என்று தான் கூறி உள்ளது. தனிப்பட்ட பெயர் போட்டு அனுப்பவில்லை.
அப்படி இருக்கும் போது இல்லாத பதவி பெயரை குறிப்பிட்டு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கடிதம் வந்ததால்தான் திருப்பி அனுப்பி உள்ளனர். எனவே சரியான பதவியை குறிப்பிட்டு தமிழக தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதை விட்டுவிட்டு வருவோர், போவோர் கையில் கடிதத்தை கொடுக்க கூடாது. அது சட்டப்படி தவறு.
இவ்வாறு இன்பதுரை கூறினார்.
இதனால் தேர்தல் கமிஷனின் கடிதம் விவகாரம் அ.தி.மு.க.வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.