என் மலர்
தமிழ்நாடு

கட்டிட மேஸ்திரி கொலை- கைதான மனைவியின் கள்ளக்காதலன், நண்பர் சேலம் ஜெயிலில் அடைப்பு
- பிரேமாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
- பிரேமாவை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் பெரியசாமி விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இது குறித்து மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். பிரேமாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், பிரேமா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் பிரேமா, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் மோகனூரில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்தேன். அப்போது அங்கு வேலை பார்த்த நந்திகேசவன் (25) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை கணவர் பெரியசாமி கண்டித்தார். இதனால் சம்பவத்தன்று மோகனூர் அருகே செல்லிப்பாளையம் பகுதியில் வைத்து அவரை நந்திகேசவன் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தார். அதன்பிறகு உறவினர்களிடம் வாகனம் மோதி கணவர் இறந்து விட்டதாக நாடகம் ஆடினேன். ஆனால் போலீசார் கண்டுபிடித்து விட்டனர் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து பிரேமாவை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் நந்திகேசவன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த பேக்கரியில் வேலை செய்த அவரது நண்பர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் (21) ஆகிய இருவரையும் மோகனூர் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மோகனூர் அடுத்த வாங்கல் பிரிவு ரோடு அருகே நின்றுகொண்டு இருந்த நந்திகேசவனையும், தனுஷையும் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.