search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் ம.தி.மு.க. மாநில மாநாடு: அண்ணா பிறந்தநாளையொட்டி வைகோ முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்
    X

    மதுரையில் ம.தி.மு.க. மாநில மாநாடு: அண்ணா பிறந்தநாளையொட்டி வைகோ முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்

    • மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
    • மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

    மதுரை:

    முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 115-வது பிறந்தநாளையொட்டி மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கின. மதுரையில் முகாமிட்ட வைகோ மாநாட்டு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    மேலும் இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்றும், மதுரை மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.

    இந்த மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

    அதன்படி மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. முன்னிலையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாலை 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    மாநாட்டில் வரவேற்பு குழு தலைவர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமை தாங்குகிறார். மாநாட்டில் இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூக நீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுயாட்சி, சுற்றுச்சூழல் சவால்கள், அண்ணா ஏற்படுத்திய அறிவுச்சுடர்,

    திராவிட இயக்கத்தில் பெண்கள், மொழி உரிமைப் போராட்டம், நதிநீர் உரிமை போரில் வைகோ, பாராளுமன்றத்தில் வைகோ, முழு மதுவிலக்கே நமது இலக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், செல்வராகவன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனோகரன், பி.கே. சுரேஷ், துணைப்பொது செயலாளர்கள் ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், டாக்டர் ரொஹையா, ராஜேந்திரன், ஆட்சிக்குழு கிருஷ்ணன் மற்றும் வந்தியதேவன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், ஆசைத்தம்பி, காரை செல்வராஜ், புலவர் அரங்க நெடுமாறன், மல்லிகா தயாளன், வழக்கறிஞர் செந்தில் செல்வன், பாஸ்கர் சேதுபதி, பால சசிகுமார் என்.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் செந்திலதிபன், துரை வைகோ, மல்லை சத்யா, கணேச மூர்த்தி, சதன் திருமலை குமார், சின்னப்பா எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. மாநாடு நிறைவு உரையாற்றுகிறார்.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    Next Story
    ×