search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் 6 மணி நேரம் சிக்கி தவித்த பயணிகள்: நள்ளிரவில் போராட்டம்- பரபரப்பு
    X

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் 6 மணி நேரம் சிக்கி தவித்த பயணிகள்: நள்ளிரவில் போராட்டம்- பரபரப்பு

    • பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
    • இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து மக்கள் நேற்று சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர்.

    பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

    கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சிறப்பு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொதுவாக பண்டிகை காலங்களில் மாலை 5 மணி முதல் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கும். இரவு 8 மணிக்கெல்லாம் பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும்.

    ஆனால் நேற்று இரவு 9.30 மணிக்கு மேல்தான் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மக்கள் கூட்டம் வந்தது. இதனால் அனைத்து நடைமேடையிலும் பயணிகள் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு புற்றீசல் போல் வந்து கொண்டே இருந்தனர். ஒரே நேரத்தில் பயணிகள் குவிந்ததால் பஸ்கள் இல்லை.

    சேலம், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் இது தெரியாமல் அங்கு வந்தனர்.

    மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தவறுதலாக கோயம்பேட்டிற்கு வந்ததால் பயணிகள் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தாம்பரத்திற்கு சென்று தான் பயணம் செய்ய வேண்டும், இங்கிருந்து இயக்க இயலாது என்று அதிகாரிகள் கூறியதால் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களை மாற்றி சிதம்பரம் மார்க்கத்திற்கு இயக்கப்பட்டது.

    இதற்கிடையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யாமல் பயணம் மேற்கொள்ள கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் உட்பட பயணிகள் அதிகளவில் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30மணி வரை காத்திருந்தும் பஸ் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்களை வெளியே செல்ல விடாமல் மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக மாலை 5 மணியில் இருந்து பஸ் நிலையத்தில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களை சி.எம்.டி.ஏ. பகுதியில் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவர்கள் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய பஸ்கள் புறப்பட முடியாமல் சிக்கிக் கொண்டன. பயணிகள் பல மணி நேரம் பஸ்சிற்குள் காத்து இருந்தனர்.

    திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு முறையான தகவல் கொடுக்காததால் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 6 மணி நேரம் பஸ் நிலையத்திற்குள் கடும் நெரிசல் ஏற்பட்டு பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை.

    பஸ் நிலையத்தை விட்டு ஒவ்வொரு பஸ்களும் ஊர்ந்துதான் சென்றன. பஸ் நிலையத்திற்குள் நெரிசல் ஏற்பட பஸ் டிரைவர்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.

    நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நள்ளிரவு 12மணி வரை தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் என மொத்த 6656 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×