search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன- ஜி.ராமகிருஷ்ணன்
    X

    பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன- ஜி.ராமகிருஷ்ணன்

    • மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.

    நெல்லை:

    மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

    அதன்படி நெல்லை, ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    நாளை மற்றும் நாளை மறுதினம் பெங்களூருவில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜனதாவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதுவரை மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்ட சூழலிலும் 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இருந்து பல்லாயிரம் நபர்கள் வெளியிடத்திற்கு குடிபெயர்ந்த சூழலிலும் அங்கு நடக்கும் கலவரத்தை பாரத பிரதமர் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை.

    மணிப்பூரில் நடக்கும் மோதலுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.-ன் அணுகுமுறை சரியில்லாதது தான் காரணம். இந்திய நாட்டில் பழங்குடியின மக்களுக்கென மாநில வாரியாக தனித்தனி சட்டங்கள் உள்ளது.

    யாரிடமும் எந்த கருத்தும் கேட்கப்படாமல் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமனம் செய்து அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை பா.ஜனதா செய்து வருகிறது. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    விலைவாசி உயர்வு, விலையை கட்டுப்படுத்துவது போன்றவைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. உணவு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தடுக்க மத்திய அரசு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

    ஆனால் தமிழகத்தில் மாநில அரசு தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்து வருவது வரவேற்கத்தக்கது.

    மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. வருகிற 23-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த நோக்கம்.

    மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் கட்சிகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும் அகில இந்திய அளவில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது.

    எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் பா.ஜ.க.வில் யாரேனும் சேர்ந்தால் அவர்கள் புனிதராகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கையை பா.ஜ.க. செய்து வருகிறது. மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

    இவர் அவர் கூறினார்.

    Next Story
    ×