என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

51 நாட்கள்... 92 சட்டமன்ற தொகுதிகள்... இதுவரை 10 லட்சம் பேரை சந்தித்த அண்ணாமலை
- தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக முறையிடுபவர்களுக்கு கட்சியினரால் செய்ய முடிந்த உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கிறார்.
- நாளை மாலை கரூரில் இருந்து தனது 52வது நாள் யாத்திரையை தொடங்குகிறார்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்...' யாத்திரையை ராமேசுவரத்தில் தொடங்கினார். மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். ஊரக பகுதி, நகர் பகுதிகளில் நடந்தும் மற்ற பகுதிகளில் வேனிலும் யாத்திரை செய்கிறார்.
அவரது இந்த யாத்திரை பா.ஜனதாவுக்கு எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவே கருதப்படுகிறது. இதுவரை 51 நாட்கள் யாத்திரை சென்றுள்ளார். 92 சட்டமன்ற தொகுதிகளையும் கடந்து சென்றுள்ளார்.
இந்த யாத்திரையை பொறுத்தவரை அவர்களே எதிர்பாராத அளவுக்கு கூட்டம் திரள்வதாக கூறுகிறார்கள். அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காணப்படுகிறார்கள். அவர்களில் கட்சி சாராத பலர் கட்சியினரிடையே முட்டி மோதி அண்ணாமலையுடன் செல்பி எடுத்து கொள்ளவும், கை குலுக்கவும், பேசவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏராளமானவர்கள் யாத்திரை செல்லும் வழிகளில் காத்து நிற்பதையும் பார்க்க முடிகிறது.
சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் பேர் வரை திரளுவதாக கணக்கிட்டுள்ளனர். அதன்படி இதுவரை 10 லட்சம் பேரை சந்தித்துள்ளார்.
தனது யாத்திரையை முழுக்க முழுக்க தேர்தல் பிரசாரம் போலவே நடத்தி வருகிறார். ஆளும் தி.மு.க. அரசு கொடுத்த பொதுவான வாக்குறுதிகள் அதில் நிறைவேற்றாமல் இருப்பது பற்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.
குறிப்பாக தான் செல்லும் தொகுதிகளின் பிரச்சனை, அந்த தொகுதி சார்ந்த நிறைவேற்றப்படாத பிரச்சனைகளையும் எடுத்துச் சொல்கிறார். அத்துடன் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் அந்தந்த தொகுதியில் பயன்பெற்றவர்களின் பட்டியலையும் அறிவிக்கிறார்.
யாத்திரை செல்லும் இடங்களில் பொதுமக்களும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் கொடுக்கிறார்கள். அந்த மனுக்களை பெற்றுக்கொள்ளும் அண்ணாமலை அதை தினமும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறார். இந்த மனுக்களை துறை வாரியாக பிரிப்பது, கம்ப்யூட்டரில் பதிவு செய்வது மனு கொடுத்தவர்களிடம் தொடர்பு கொண்டு விசாரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள கமலாலயத்தில் 10 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. அவர்கள் மனுக்களை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.
தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக முறையிடுபவர்களுக்கு கட்சியினரால் செய்ய முடிந்த உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கிறார்.
ஒரு இடத்தில் கால்வாயை கடந்து செல்ல வசதியில்லை என்றார்கள். உடனடியாக சிமெண்ட் சிலாப் அமைத்து கொடுத்தார். கரூரை சேர்ந்தவர் லண்டனில் இறந்து விட்டார். அவரது உடலை கொண்டு வர முடியாமல் தவிப்பதாக அவரது குடும்பத்தினர் முறையிட்டார்கள். உடனடியாக மத்திய அரசு மற்றும் லண்டன் தமிழ் சங்கம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு உடலை கரூர் கொண்டு வர ஏற்பாடு செய்ததோடு கட்சியினரிடம் நிதி திரட்டி அந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் நிதி வழங்கினார்.
பரமத்திவேலூரில் தாய்-மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் அந்த வீட்டுக்கு சென்று விசாரித்து ஆறுதல் கூறினார்.
வீடு இல்லை என்று பலர் கேட்டனர். அவர்கள் பெயர் விவரங்களை கேட்டு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
அவரது இந்த பயணத்தின் மூலம் எல்லா பகுதிகளிலும் பா.ஜனதாவை காலூன்ற வைத்து வருகிறார். இன்று இலங்கை சென்றுள்ளதால் பயணம் நடைபெறவில்லை.
நாளை மாலை கரூரில் இருந்து தனது 52வது நாள் யாத்திரையை தொடங்குகிறார். 8-ந் தேதி திருச்சியில் முடிக்கிறார். அதன் பிறகு 4-வது கட்ட யாத்திரை தீபாவளிக்கு பிறகு 15 அல்லது 16-ந் தேதியில் தொடங்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.






