search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாவட்ட செயலாளர்கள்-நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
    X

    மாவட்ட செயலாளர்கள்-நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    • ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுதொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை தேர்தல் மூலமாக முறைப்படி தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதுதொடர்பாகவும், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்தி அதில் எடப்பாடி பழனிசாமியை முறைப்படி தேர்வு செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த வழக்கில் உரிய பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகவும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி விவகாரத்தை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்று நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தினர்.

    அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எதிர்கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×