search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆளுநருக்கு எதிரான புகார் மனு- ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்தது திமுக
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆளுநருக்கு எதிரான புகார் மனு- ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்தது திமுக

    • ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கி, அரசியலமைப்பு விழுமியங்களை காத்திட வேண்டும் என்று புகார்.
    • ஆளுநரை திரும்ப பெறக்கோரிய மனுவில் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

    தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையே சில விஷயங்கள் தொடர்பாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டினர்.

    கவர்னர் ஒரு மதத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஒரு மனு தயாரித்து அதில் கையெழுத்திட்டனர்.

    இந்த மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் நேரில் கொடுக்க நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டு இருந்தனர். ஆனால் இதற்கு நேரம் கிடைக்கவில்லை. இதையடுத்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் சார்பில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.

    அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை அவரது பெயரிலேயே முன்னெடுக்க வேண்டியுள்ளது.

    ஆகவே, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கை அளவிலும் செயல்பாட்டளவிலும் எதிர்ப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறியதும் மக்களாட்சிக்குச் சாவுமணி அடிப்பதுமான செயலாகும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ, சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றித் தாமதப்படுத்துவதையோ, மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். ஆளுநரின் செயலால் அத்தகைய ஒரு சூழல்தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

    ஆட்சியுரிமையை மாநில மக்கள் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு வழங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலாக, தி.மு.க. அரசு இரவும் பகலும் மக்களுக்காக உழைத்து, மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

    எனினும், தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றிக் காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவது பற்றிய எங்கள் அதிருப்தியை அவருக்கான உச்சபட்ச மரியாதையுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தேவையின்றிக் காலந்தாழ்த்துகிறார். இது மாநில நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாக இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் மக்களுக்காகப் பணியாற்றுவதைத் தடுப்பதாக இருக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.

    பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளைச் சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் சொர்க்கமாக திகழ்கிறது. கவர்னர் ஆர்.என். ரவி இந்நாட்டின் மதச்சார்பின்மை கருத்தியலில் தனது நம்பிக்கையின்மையை பொதுவெளியில் தெரிவிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, அடிக்கடி சமுதாயத்தில் பிளவுபடுத்தும் பேச்சுகளில் ஈடுபடுகிறார். இத்தேசத்தின் மதச்சார்பின்மைப் பண்புகளில் மாறாப்பற்று கொண்ட எங்கள் அரசுக்கு இது பெரும் சங்கடமாக உள்ளது.

    தாம் வகிக்கும் கவர்னர் பொறுப்புக்குச் சிறிதும் பொருத்தமற்ற வகையில், அவர் ஆபத்தான, பிளவு படுத்தும் நோக்கிலான, மதரீதியான கருத்துகளைப் பொதுவெளியில் பேசி வருகிறார்.

    சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின்பால் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் தூண்டும் வகையில் அல்லது தூண்ட முயலும் வகையில் அவரது அறிக்கைகள் இருப்பதால் அவை தேசத்துரோகமானவை என்றும் சிலர் கருதக்கூடும்.

    தனது நடத்தையாலும் செயல்களாலும், ஆர்.என்.ரவி அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட கவர்னர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஆகவே அப்பொறுப்பில் இருந்து அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

    அரசியல் சட்டப் பிரிவு 156(1)-ன்படி, குடியரசுத் தலைவர் விரும்பும் வரையில் கவர்னர் தனது பதவியில் நீடிப்பார். ஆகவே, தமிழ்நாடு கவர்னர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கி, அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×