search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்: தி.மு.க. எம்.பி.க்கள் நாளை ஆலோசனை
    X

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்: தி.மு.க. எம்.பி.க்கள் நாளை ஆலோசனை

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சில அறிவிப்புகள் மூலம் மக்களை கவர பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.
    • எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து சில முக்கிய பிரச்சனைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் முழுமையாக இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    சிறப்பு கூட்டத்தொடரில் 75 ஆண்டு கால பாராளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவலக மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

    இவை தவிர நடைமுறையில் இல்லாத தேவையற்ற சட்டங்களை ரத்து செய்யவும் இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. என்றாலும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்குவதால் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சில அறிவிப்புகள் மூலம் மக்களை கவர பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. எனவே பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில்கலந்து கொண்டு பதிலடி கொடுக்க தீர்மானித்துள்ளன. இதை கருத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் சிறப்பு கூட்டம் நடக்கும் 5 நாட்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து சில முக்கிய பிரச்சனைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளன. மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சனாதன சர்ச்சை ஆகியவற்றை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

    மேலும் எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகள் தங்கள் மாநில பிரச்சனைகளை சிறப்பு கூட்டத்தில் எதிரொலிக்க செய்ய முடிவு செய்துள்ளன. அந்த வகையில் தமிழக எம்.பி.க்கள் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாத பிரச்சனையை எழுப்பும் என்று தெரிகிறது.

    இதற்காக தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளது.

    எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முக்கிய பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டு இருப்பதால் அவற்றை எதிர்கொள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்களும் தயாராகி வருகிறார்கள். சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை மேம்படுத்தும் வகையில் ஜி-20 மாநாடு நடத்தப்பட்டதையும், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதையும் முன்னிலைப்படுத்த பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதன் காரணமாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×