search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ள நிவாரண நிதி வினியோகம் தொடங்கியது
    X

    வெள்ள நிவாரண நிதி வினியோகம் தொடங்கியது

    • வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
    • டோக்கனில் நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18-ந் தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது.

    இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி, நிவாரண பணிகள் நடைபெற்றது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள சேதங்கள் ஏற்பட்ட நெல்லை, தூத்துக்குடியை கடந்த 21-ந் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண தொகையை அறிவித்தார்.

    அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதி மக்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் அறிவித்தார். தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிவாரண தொகையாக அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக அளவு வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.


    அந்த டோக்கனில் நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பை ஆகிய தாலுகா பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.

    ராதாபுரம் தாலுகாவில் லெவிஞ்சிபுரம், செட்டி குளம், கூடன்குளம், விஜயாபதி மற்றும் திருவம்பலாபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்கள், திசையன்விளை தாலுகாவில் திசையன்விளை, அப்பு விளை, உருமன்குளம், கரைசுத்து, புதூர், உவரி, குட்டம் ஆகிய 6 வருவாய் கிராமங்களை சேர்ந்த 3 லட்சத்து 40 ஆயிரத்து 552 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று முதல் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 5 தாலுகாக்கள் முழுவதும் 3 லட்சத்து 23 ஆயிரத்து 108 ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 63 ஆயிரத்து 760 ரேஷன்கார்டு தாரர்களுக்கு வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இதற்காக ரூ.398 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் மாநில பேரிடர் நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்து உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மானூர், நாங்குநேரி தாலுகாக்கள் முழுவதும், ராதாபுரம், திசையன்விளை தாலுகாக்களில் ரூ.6 ஆயிரம் நிவாரணம் பெரும் 6 வருவாய் கிராமங்களை தவிர மற்ற பகுதிகள் என 1 லட்சத்து 63 ஆயிரத்து 705 ரேஷன் அட்டை தாரர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு என 5 தாலுகாக்கள் முழுவதும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 717 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, திருவேங்கடம், வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்கள் முழுவதும் 4 லட்சத்து 74 ஆயிரத்து 939 ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் பணி இன்று தொடங்கியது.

    இன்று நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கியதை அடுத்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரேஷன்கடைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் நிவாரண தொகையை பெற திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரண தொகையை பெற்று சென்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகையை வழங்கும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பகுதியில் வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ஸ்மார்ட் கார்டு, டோக்கன், ஆகியவற்றுடன் ரேஷன் அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் கைரேகையை வைத்து தங்களுக்கான நிவாரண தொகையை பெற்று சென்றனர்.

    வெள்ள நிவாரண தொகையை மேற்கொள்ளும் பணிகளுக்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து ரேஷன்கடைகளும் வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)செயல்படும் எனவும், 1-ந் தேதி ( திங்கட்கிழமை) விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

    Next Story
    ×