search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுப்பு: தடையை மீறியவர்கள் அதிரடியாக கைது
    X

    பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுப்பு: தடையை மீறியவர்கள் அதிரடியாக கைது

    • எந்தெந்த இடங்களில் கொடிக்கம்பங்களை நட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    • கொடி ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு நடப்பட்டிருந்த அக்கட்சியின் கொடிக்கம்பம் கடந்த வாரம் நள்ளிரவில் அகற்றப்பட்டது.

    அனுமதியின்றி கொடிக்கம்பத்தை நட்டிருந்ததாக கூறி மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் அதனை அகற்றினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பால் தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் 100 நாட்களில் தினம் 100 கொடிக்கம்பங்கள் என்ற வகையில் 10 ஆயிரம் கொடிக்கம்பங்கள் நடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதன்படி பாரதிய ஜனதா கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் 1,400 இடங்களில் கொடிக் கம்பத்தை நடுவதற்கு திட்டமிட்டிருந்தனர். சென்னையில் 280 இடங்கள் அடையாளம் காணப்பட்டு கொடியேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

    எந்தெந்த இடங்களில் கொடிக்கம்பங்களை நட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ஒவ்வொரு ஊர்களிலும் கட்சி கொடி கம்பங்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அது போன்ற இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கொடி இல்லாத இடங்களை தேர்வு செய்து அங்கு கொடியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் கொடிக்கம்பத்தை நடுவதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடையை மீறி பாரதிய ஜனதா கட்சியினர் கொடிக்கம்பத்தை நட்டு கொடியேற்ற முயன்றனர்.

    இதனால் போலீசாருக்கும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு-மோதல் ஏற்பட்டது. கொடியேற்றுவதை தடுக்க வந்த போலீசாருடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று பரபரப்பு நிலவியது. கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நடந்தது போன்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தடையை மீறி கொடிக் கம்பங்களை நட முயன்ற பாரதிய ஜனதா கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூரில் இன்று பா.ஜனதா கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற இருந்தது. இதற்காக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றுவதற்காக பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சென்றிருந்தார். ஆனால் கொடியேற்ற அனுமதி பெறவில்லை என கூறி போலீசார் தடுத்தனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

    வேலூர் இப்ராஹிம் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். மண்டபத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை பீளமேடு அருகே மசக்காளி பாளையத்தில் இன்று பா.ஜ.க. கொடியேற்றும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்காக அந்த பகுதியில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டனர். அவர்கள் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.

    கொடிக்கம்பம் நடுவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி நட முயன்றதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அனுமதியின்றி கூடிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 45 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி சென்று அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதனை தொடர்ந்து தூத்துக்குடி நகரில் 4 இடங்கள் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தெற்கு மண்டல் பா.ஜ.க. கட்சி அலுவலகம் எதிரிலும், தோப்பு பஜார் பகுதி உட்பட 14 இடங்களில் இன்று காலை கொடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    கொடியேற்று நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ஆனந்த பிரியா கலந்து கொள்ள இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி இல்லை என்று கூறி போலீசார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க மறுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கொடி ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் கூடியுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் இது போன்று பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் கொடியேற்றி கைதாகி வருகிறார்கள்.

    Next Story
    ×