search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேவை இல்லாத பொருட்களை வீடு, வீடாக சேகரிக்க முடிவு- மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் நாளை முதல் ஒப்படைக்கலாம்
    X

    தேவை இல்லாத பொருட்களை வீடு, வீடாக சேகரிக்க முடிவு- மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் நாளை முதல் ஒப்படைக்கலாம்

    • பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலம் தெருக்களில் மாநகராட்சி ஊழியர்கள் காற்று மாசு இல்லாத போகிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
    • மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழர் திருநாளான தை பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது.

    14-ந்தேதி போகி பண்டிகை, 15-ந்தேதி தைப்பொங்கல், 16-ந்தேதி திருவள்ளுவர் தினம், மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் இல்லங்களில் விழாக்கோலம் பூண்டு இருக்கும்.

    பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக கடைபிடிக்கப்படும் போகி பண்டிகை தினத்தன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பார்கள். இதன் உண்மையான அர்த்தம் மருவி போனதால் வீடுகளில் இருக்கும் பழையப் பொருட்கள் தேவையில்லாத சாமான்களை வீட்டை விட்டு வெளியே எறியும் நாளாக மாற்றி விட்டனர்.

    கடந்த சில ஆண்டுகளாக போகி தினத்தன்று பழைய பொருட்களை அதிகாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கும் பழக்கமும் வந்து விட்டது. ஆண்டுக்கு ஆண்டு பழைய துணிகள், டயர்கள், டியூப்புகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எரிப்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை அளவுக்கு அதிகமாக எரிப்பதால் சென்னையில் காற்று மாசு எச்சரிக்கை அளவை கடந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாறி விடுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வசிக்கிறார்கள். மக்கள் அடர்த்தி காரணமாக ஏற்கனவே காற்று மாசு உள்ளது.

    இதற்கிடையே வாகனங்கள் மூலம் வெளியாகும் புகை மாசும் சேர்ந்துக் கொள்கிறது. வழக்கமாக போகி கொண்டாடப்படும் நாளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் அது காற்றில் நச்சு துகள்களை பரவ செய்து விடுகிறது.

    பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் பிளாஸ்டிக் எரிக்கப்படும் போது மக்களிடம் மூச்சு திணறல் அபாயம் ஏற்படும். ஏற்கனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கூடுதல் பாதிப்பு உண்டாகும். எனவே இத்தகைய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் வகையில் காற்று மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாடுமாறு கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு போகி கொண்டாட்டம் களை கட்ட உள்ளது. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்து உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாத பொருட்களை எரிப்பதற்கு பதில் அவற்றை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப் மற்றும் நெகிழி ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தவிர்த்து, அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முதல் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாநகராட்சி அறிவித்துள்ளபடி நாளை முதல் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக வர உள்ளனர். அவர்களிடம் பழைய துணிகள், டயர்களை பொதுமக்கள் ஒப்படைக்கலாம். இதற்காக மாநகராட்சி விழிப்புணர்வு பிரசாரத்தையும் இன்று (சனிக்கிழமை) தொடங்கி உள்ளது.

    பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலம் தெருக்களில் மாநகராட்சி ஊழியர்கள் காற்று மாசு இல்லாத போகிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்டோக்களில் ரேடியோ கட்டிவிழிப்புணர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆர்.கண்ணன் தெரிவித்தார்.

    சமூக வலைதளங்களில், எப்.எம். ரேடியோக்கள் மூலமாகவும் காற்று மாசு இல்லாத போகி பண்டிகை பற்றி சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையே 13-ந்தேதி இரவு தொடங்கி பொதுமக்கள் பழைய துணிகள், டயர்களை எரிக்க வாய்ப்புள்ள உள்ளதால் அதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    13-ந்தேதி இரவும், 14-ந்தேதி அதிகாலையிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிக்க உள்ளனர். இதன் மூலம் சென்னையில் காற்று மாசு ஏற்படுவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு சென்னையில் போகி தினத்தன்று 2.6 டன் தேவையற்ற பழைய துணிகள், டயர்களை சென்னை மாநகராட்சியினர் பறிமுதல் செய்தனர். கடந்த ஆண்டு அந்த அளவு அதிகரித்தது. இந்த ஆண்டு சுமார் 3 டன் பழைய துணிகள், டயர்கள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுமக்கள் வழங்கும் பழைய துணிகள், டயர்கள், ரப்பர் டியூப்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை மணலியில் நவீன ஆலையில் எரியூட்ட உள்ளனர்.

    Next Story
    ×