search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா பரவல் எதிரொலி- அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    கொரோனா பரவல் எதிரொலி- அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள்.
    • ஏற்கனவே முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வேறு என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டிருந்தது. பொதுமக்களும் முக கவசம் அணியாமல் சகஜ நிலையில் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா ஜூன் மாதம் மீண்டும் பரவுவது அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இதனால் முக கவசம் அணிய வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.

    கொரோனா பரிசோதனையையும் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று 29 ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா பரவியது கண்டறியப்பட்டது.

    அந்த வகையில் 137 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 909 பேர், செங்கல்பட்டில் 352 பேர், திருவள்ளூரில் 100 பேர், கோவையில் 96 பேர், காஞ்சிபுரத்தில் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் இதுவரை ஏற்படவில்லை. நேற்றைய நிலவரப்படி 11 ஆயிரத்து 94 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 745 பேரும், செங்கல்பட்டில் 1,923 பேரும், கோவையில் 693 பேரும், திருவள்ளூரில் 627 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

    இதனால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் முக கவசம் அணியுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து பல பகுதிகளில் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள்.

    ஏற்கனவே முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வேறு என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன என்பது அரசின் சார்பில் பின்னர் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×