என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராகுல் தகுதி நீக்க விவகாரம்- டெல்லியில் 5 லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்த திட்டம்
- நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்களை திரட்டி டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
- குறைந்தபட்சம் 5 லட்சம் பேரை திரட்டி டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
சென்னை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அந்த மாநில தலைமை இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றன. சிறு சிறு அளவில் ஆங்காங்கே நடத்தப்படும் இந்த போராட்டங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை.
எனவே நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்களை திரட்டி டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
இதற்காக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன்படி இன்று தமிழகத்துக்கு முகுல் வாஸ்னிக் வந்துள்ளார். அவர் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது ராகுல் காந்தி விவகாரத்தால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், டெல்லி போராட்டத்துக்கு எவ்வளவு பேரை திரட்டி வர முடியும் என்று விவாதிக்கிறார்கள்.
குறைந்தபட்சம் 5 லட்சம் பேரை திரட்டி டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த போராட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.






