என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
    X

    சென்னை மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

    • அசோக் நகர் 4வது அவென்யூ பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகள் அனைத்தையும் இன்னும் 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இன்னும் 2 மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னேற்பாடாக மழைநீர் தேங்காமல் இருக்க பல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.2,325 கோடி மதிப்பீட்டில் 738.22 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.

    வடசென்னை பகுதியின் கொசஸ்தலையாறு வடி நிலப்பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியின் கீழ் 769 கி.மீ. நீளத்திற்கு ரூ.3,220 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை 483.83 கி.மீ. நீளத்திற்கு பணிகள் நிறைவடைந்துள்ளன.

    தென் சென்னையில் கோவளம் வடிநிலத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது. இதில் 160.83 கி.மீ. தூர பணிகளில் 21.82 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது தவிர மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி மற்றும் பழுது பார்க்கும் பணிகள் ரூ.27.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

    கடந்த ஆண்டு பருவமழையின் போது சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் இந்த முறை தண்ணீர் தேங்காத அளவுக்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    முதலில் பழவந்தாங்கல் வழியாக நங்கநல்லூர் எம்.ஜி.ஆர்.சாலைக்கு சென்று அங்கு ரூ.71 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.

    அங்கு நடைபெற்று வரும் 2.29 கிலோ மீட்டர் பணிகளில் 1.78 கி.மீ.பணிகள் முடிவடைந்து இருந்தது. மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த பணி முடியும் போது இந்துகாலனி, பி.வி.நகர் மற்றும் நேரு நெடுஞ்சாலை பகுதிகள் பயனடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கோவளம் பேசின் மழைநீர் வடிகால் பணிகளின் விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார். அவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதா கிருஷ்ணன் பணிகளின் விவரங்களை விளக்கி கூறினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்றார்.


    போலீஸ் நிலையத்துக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வரவேற்றனர். போலீஸ் நிலையத்தின் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக சென்ற அவர் வருகைப் பதிவேட்டையும் பார்வையிட்டார்.

    பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    அதன் பிறகு அங்கிருந்து போரூர் சென்றார். போரூர் ஏரி உபரி நீர் வெளியேற ரூ.100 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் மதகு பணிகளை பார்வையிட்டார்.

    நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள போரூர் ஏரியின் நீர் பரப்பு 252 ஏக்கராகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 67 மில்லியன் கன அடியாகும். இதன் வலது கரையோரம் 25 மீட்டர் நீளத்திற்கு உபரி நீர் வழிந்தோடி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த கரையின் நீளம் 3,092 மீட்டராகும்.

    இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் போகும் பாதையில் குடியிருப்புகள் அதிகமாகி விட்டதால் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்து விடுகிறது. இதன் காரணமாக அங்கு புதிய மதகு அமைக்கும் பணி ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. போரூர் ஏரி முதல் ராமாபுரம் ஓடை வரை புதிதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகள் அங்கு நடைபெற்று வந்தது. அதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அவருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிகள் பற்றி விளக்கி கூறினார்கள்.

    அமைச்சர் தா.மோ.அன்பரசனும் போரூர் ஏரி மதகு அமைக்கும் பணிகள் குறித்து சில விவரங்களை தெரிவித்தார்.

    இந்த பணிகள் அனைத்தையும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடித்துவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    அதன் பிறகு அசோக் நகர் சென்றார். அங்கு 4வது அவென்யூ பகுதியில் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழையின் போது 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இதனால் மேற்கு மாம்பலம் பகுதியும் பாதிக்கப்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண ரூ.7 கோடி 60 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அவருக்கு மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வடிகால் பணி எப்போது முடியும் என்பதை விளக்கி கூறினார். இந்த பணிகள் அனைத்தையும் இன்னும் 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    அப்போது அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    Next Story
    ×