search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சரின் ஏற்பாட்டில் இரு கால்களையும் இழந்த சிறுமிக்கு வெளிநாட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது
    X

    முதலமைச்சரின் ஏற்பாட்டில் இரு கால்களையும் இழந்த சிறுமிக்கு வெளிநாட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது

    • செயற்கை கால் பாதங்கள் ரூ.2,86,000 செலவில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
    • அமைச்சர் மா.சுப்பிரமணியனை சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    சென்னை:

    மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா (வயது 13) எனும் சிறுமி எஸ்.எல்.இ எனப்படும் ரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, இரு கால்களிலும் ரத்த ஓட்டம் தடைபட்டு மிகுந்த வலியுடன் முன்பாதங்களும் கறுத்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

    அதனை சரி செய்ய முடியாத நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றதும், அவரது அறிவுறுத்தலின்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி அச்சிறுமிக்கு, ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை, முடக்கு வாதவியல் துறை மற்றும் சிறுநீரக மருத்துவ துறை போன்ற பல்வேறு உயர் சிறப்பு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர்.

    ரத்தத்தில் உள்ள நச்சு குறைவதற்கான மருந்துகள் செலுத்தப்பட்டு அதனை சரிசெய்து, இருகால்களின் முன்பாதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை காயங்களும் நன்றாக ஆறி, தற்போது வலி நன்கு குறைந்து நலமாக உள்ளார்.

    மேலும் காயங்கள் முழுவதுமாக ஆறியதால், வெளிநாட்டில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட இயற்கை கால்களைப் போன்றே உள்ள செயற்கை கால் பாதங்கள் ரூ.2,86,000 செலவில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சையினால் அக்குழந்தையால் எளிதாக நடக்கவும், அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளவும் செய்ய முடிகிறது.

    இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியனை ஆஸ்பத்திரியில் சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடனிருந்தனர்.

    Next Story
    ×