search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் குறைப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் குறைப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • பணி முடிவடையாத போது திட்டத்துக்கான செலவு அதிகரிப்பதோடு, நிறைவேறாத பணிகளால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள்.
    • ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது.

    சென்னை:

    4 மாவட்ட கலெக்டர்கள் கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    சாலைப் பணிகள், பாலங்கள், சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி தருவதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும். பெரும்பாலான பணிகள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறினாலும் ஒரு சில பணிகளில் தொய்வு இருப்பதை கவனித்தோம். அதற்கான விளக்கத்தை தெரிவித்தீர்கள்.

    அதன்படி பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்கிறேன். திட்டங்கள் காலதாமதம் ஏற்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி முந்தைய ஆய்வு கூட்டங்களில் சொன்னதை மீண்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதி ஒதுக்கீட்டில் நடக்கிறது. அந்த பணி முடிவடையாத போது திட்டத்துக்கான செலவு அதிகரிப்பதோடு, நிறைவேறாத பணிகளால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள்.

    எனவே எக்காரணம் கொண்டும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிவடைய வேண்டும் என்பது போல் நலத்திட்டங்களும் குறிப்பாக விளிம்பு நிலை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தவித குறைபாடும் இன்றி முழுமையாக குறிப்பிட்ட காலத்தில் சென்றடைய வேண்டும் என்பதை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.

    இந்த அரசு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது.

    எனவே அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார தலைவர்களும் அனைத்து துறை திட்டங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நான் 2 முக்கிய அறிவிப்புகளை இந்த கூட்டத்தின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்.

    1. தென்சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த அரசு பதவி ஏற்றவுடன் ராஜீவ்காந்தி தகவல் தொழில் நுட்ப சாலையில் உள்ள பெருங்குடி கட்டண சாவடியில் கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது.

    2. சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சியையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் (சிறிய அடுக்குமாடி வீடுகள்) உள்ளன.

    அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் கட்டண முறையை மாற்றியமைத்த போது இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின் கட்டணங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

    இதனால் பொது மக்களுக்கான மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டி உள்ளது.

    இக்குடியிருப்புகளில் வசிக்க கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு குடியிருப்பு நல சங்கங்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இதனை பரிசீலித்து 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாக 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் இருக்க கூடிய மின் தூக்கி (லிப்ட்) இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான புதிய சலுகை கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படும்.

    இதன் கீழ் பொது பயன்பாட்டுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் 1 யூனிட்டுக்கு 8 ரூபாயில் இருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறையும்.

    இதனால் மாநிலம் முழுவதும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்.

    Next Story
    ×