என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஈரோடு வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு
- முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதை யொட்டி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் கோவை வருகிறார்.
அங்கிருந்து ஈரோட்டுக்கு சாலை மார்க்கமாக மாலை காரில் வருகிறார். பின்னர் ஈரோடு பெருந்துறை ரோடு, மேட்டு கடையில் உள்ள தங்கம் மஹாலில் நடக்கும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.
அதன் பிறகு அவர் ஈரோட்டில் இருந்து கிளம்பி கரூருக்கு சென்று இரவில் தங்குகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் செல்லும் சாலையின் இருபுறமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.
இதையொட்டி மேட்டுக்கடை, தங்க மகாலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






