search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிதம்பரத்தில் மதுபான கூடுதல் விலையை கண்டித்து ரகளையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்
    X

    சிதம்பரத்தில் மதுபான கூடுதல் விலையை கண்டித்து ரகளையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்

    • டாஸ்மாக்கில் விற்ற குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதல் பணம் வாங்கியதால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மதுவிற்கு கூடுதல் பணம் வாங்குவதாக கூறி ஆட்டோ டிரைவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

    சிதம்பரம்:

    தமிழகத்தில் சமீப காலமாக டாஸ்மாக் கடையில் மதுபிரியர்கள் வாங்கும் மதுவிற்கு குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதல் பணம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் விற்ற குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதல் பணம் வாங்கியதால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மதுவிற்கு கூடுதல் பணம் வாங்குவதாக கூறி ஆட்டோ டிரைவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

    சிதம்பரம் சித்தலபாடி வண்டிகாரதெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். ஆட்டோ டிரைவர். மேலும் பா.ஜ.க நிர்வாகியாக உள்ளார். வெங்கடேசன் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சிதம்பரம் பஸ் நிலையம் அருகே 3 டாஸ்மாக் கடைகள் உள்ளது. வெங்கடேசன் அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் வாங்கினார். அப்போது டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த ஊழியர் மது பாட்டில் ஒன்றிற்கு பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் கேட்டு வாங்கினார்.

    இதற்கு ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் 10 ரூபாய் எதற்கு அதிகமாக தர வேண்டும் என டாஸ்மாக் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூடுதல் பணத்தை தந்தால் மட்டுமே இங்கிருந்து செல்வேன் என்று கூறி தகராறு செய்தார். அவர் தகராறில் ஈடுபட்டதை தனது செல்போனில் படம் எடுத்து அதனை சமூக வலை தளத்தில் வெளியிட்டார்.

    மேலும் அங்கு மது அருந்தி கொண்டிருந்த நபர்களிடமும் நீங்களும் பணத்தை கேளுங்கள் என்று கூறினார். அப்போது அங்கு வந்த ஆட்டோ தொழிலாளர்களுடனுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு வந்து டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்ட வெங்கடேசனை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் வெங்கடேசன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் வெங்கடேசன் மீது நடுரோட்டில் பொது மக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×