என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரக்கோணம் வாலிபர் கொலையில் தொடர்பு- ரெயிலில் தப்பி வந்த 2 வாலிபர்கள் சேலத்தில் கைது
    X

    அரக்கோணம் வாலிபர் கொலையில் தொடர்பு- ரெயிலில் தப்பி வந்த 2 வாலிபர்கள் சேலத்தில் கைது

    • சிகிச்சை பலனின்றி பிராங்கிளின் பரிதாபமாக இறந்தார்.
    • ரெயில்வே போலீசார் இன்று காலை ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் அருகே கடந்த 7 -ந் தேதி இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளின் சரிந்து விழுந்தார்.

    தகவல் அறிந்த அரக்கோணம் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிராங்கிளின் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, அரக்கோணம் ஏ.எஸ்.பி. அசோக் கிரீஸ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பாரதி, விநாயகமூர்த்தி, பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதி ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பிராங்கிளினுக்கும், சென்னையை சேர்ந்த சில பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில் நோட்டமிட்ட சென்னை கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே சேலம் வழியாக செல்லும் தன்பாத் ரெயில் பொதுப்பெட்டியல் சேலத்திற்கு கொலையாளிகள் 2 பேர் தப்பி செல்வதாக அரக்கோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரக்கோணம் போலீசார் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சேலம் ரெயில்வே போலீசார் இன்று காலை ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை 5.30 மணியளவில் தன்பாத் ரெயில் செலம் ஜங்சன் ரெயில் நிலைய பிளாட்பார்ம் 4-க்கு வந்தது. இதையடுத்து அங்கு தயாராக நின்ற ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் பொதுப்பெட்டியில் ஏறி அங்கிருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்திய போது சென்னையை ரெட்கில்ஸ் வ.உ.சி. தெருவை சேர்ந்த லோகேஷ்வரன் (28), சென்னை மணலியை சேர்ந்த கார்த்தி (28) என்பது தெரிய வந்தது.

    பின்னர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் 2 பேரையும் அரக்கோணம் டவுன் போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×