search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தலைவரை நியமிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
    X

    ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தலைவரை நியமிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

    • ஆசிரியர் தேர்வு வாரிய விதிகளின்படி அதன் தலைவராக முதன்மை செயலாளர் நிலையில் உள்ள இ.ஆ.ப அதிகாரி தான் நியமிக்கப்பட வேண்டும்.
    • செயலாளர் நிலையைக் கூட எட்டாத கூடுதல் செயலாளர், சிறப்பு செயலாளர் நிலையில் உள்ள இ.ஆ.ப. அதிகாரிகள் தான் நியமிக்கப்படுகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது கணக்கிடப்பட்டு ஓராண்டாகியும் அந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்றால், ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு இருப்பதில் அர்த்தமே இல்லை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை கடந்த 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது.

    அதன்படியான ஆசிரியர்கள் நியமனம் கடந்த நவம்பர் மாத இறுதியில் தான் நிறைவடைந்தது. இ.ஆ.ப., இ.கா.ப. பணிகளுக்காக குடிமைப்பணி தேர்வுகளே அறிவிக்கை வெளியான நாளிலிருந்து 11 மாதங்களில் நடத்தி முடிக்கப்படும் நிலையில், ஆசிரியர் பணிக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் 15 மாதங்கள் எடுத்துகொள்வது எப்படி சரியாகும்? இந்த தாமதம் போக்கப்பட வேண்டும்.

    ஆசிரியர் தேர்வு வாரிய விதிகளின்படி அதன் தலைவராக முதன்மை செயலாளர் நிலையில் உள்ள இ.ஆ.ப அதிகாரி தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், செயலாளர் நிலையைக் கூட எட்டாத கூடுதல் செயலாளர், சிறப்பு செயலாளர் நிலையில் உள்ள இ.ஆ.ப. அதிகாரிகள் தான் நியமிக்கப்படுகின்றனர். இதுவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளை மந்தமாக்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளன. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் பணியிடங்களுக்கு இணையான ஆசிரியர்களை முன்கூட்டியே தேர்வு செய்து, ஆசிரியர் பணியிடம் காலியான உடன் நியமிக்க வேண்டும்.

    அதற்கு வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முதன்மை செயலர் நிலையில் உள்ள அதிகாரியை தலைவராக நியமிக்க அரசு முன்வர வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கூடுதல் அதிகாரிகள், பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×