search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரை பறித்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் அவலம்
    X

    100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரை பறித்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் அவலம்

    • பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.
    • மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கநடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடை மேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர். தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்கநடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கிடையே நேற்று மதியம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மனோகரன், அவரது மகள்கள் தாரணி, தேவதர்ஷினி ஆகியோர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது மின்சார ரெயில் மோதி பலியானர்கள். இவர்களில் தாரணி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், தேவதர்ஷினி 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். பல்வேறு எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவிகள் 2 பேரின் வாழ்க்கையும் நொடிப்பொழுதில் முடிந்து போனது.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ.38 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.


    ஆனால் அந்த சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த இடம் தண்ணீர் நிறைந்து குப்பைகளால் சுரங்கப்பாதை இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு உள்ளது. பணிகள் நடைபெற்றதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. ரெயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் சுரங்கநடைபாதை மற்றும் மேம்பாலம் இல்லாததால் வேப்பம்பட்டு ரெயில் நிலைத்தில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? என்பதே பொதுமக்களின் ஆவேசமாக உள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியின் பெரும்பகுதியை கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்துள்ளது.

    ஆனால், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட்டின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன. மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது. இதற்காக 5-க்கும் மேற்பட்ட தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோர்ட்டில் நடைபெற்ற வழக்குகளில் சாதகமான உத்தரவு வந்த பின்னரும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது. இப்படி 10 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரெயில் பயணி தியாகராஜன் கூறியதாவது:-

    வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட்டு நீக்கியும் மேம்பால பணி கிடப்பில் உள்ளது.

    தியாகராஜன்

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது மிகவும் சோகமானது. ரெயில் நிலையத்தில் பயணிகளின் தேவையை அறிந்த அதற்கேற்ப வசதிகள் செய்துதர வேண்டும். ரெயில் நிலையத்தில் நடை மேம்பாலம், சுரங்கப்பாதை இல்லை என்று பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் கூறிவருகிறார்கள்.

    ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கையும் ரெயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. இப்போது ஒரே விபத்தில் 3 பேர் தங்களது வாழ்க்கையை இழந்து விட்டனர். இதற்கு யார் பொறுப்பு? அதிகாரிகள் தான் இதற்கு முழுகாரணம் ஆகும்.

    வேப்பம்பட்டு ரெயில்வே கேட்டை தாண்டி பெருமாள்பட்டு மற்றும் வேப்பம்பட்டு பகுதிகளுக்கு மட்டும் இல்லாமல், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருமழிசை, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழியாக இருக்கின்றன. ரெயில்வே மேம்பால பணி கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணியை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இது போன்ற விபத்து பலிகள் தொடரத்தான் செய்யும் என்றார்.

    ஜோதி விஸ்வநாதன்(வேப்பம்பட்டு):-

    தினமுன் ஏராளமானோர் பயன்படுத்தும் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் சுரங்கநடைபாதை இதுவரை அமைக்காதது மிகப்பெரிய தவறு. வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 100 கி.மீட்டருக்கும் மேல் வேகத்தில் செல்கின்றன. ஆனால் தண்டவாளத்தை கடந்து செல்ல எந்த முன்எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் பல ரெயில் நிலையங்களில் ரெயில்வே நடை மேம்பாலம், சுரங்கநடைபாதை இல்லாத நிலையே காணப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இனியாவது ரெயில்வே வாரியம் விரைந்து எடுக்க வேண்டும்.

    ஜோதி விஸ்வநாதன்

    இதேபோல் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுக்கு மேல் கிடப்பில் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    மருத்துவ மனைக்கு உடனடியாக அழைத்து செல்லவேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டி இருக்கிறது. மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×