search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்த கோடை மழை: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
    X

    ஊட்டியில் திடீரென மழை பெய்த காட்சி.

    ஊட்டியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்த கோடை மழை: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

    • ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
    • கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், இது ஒரு குளிர்பிரதேசம் என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக காலை முதல் மாலை வரை அனல் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்ததால் அங்குள்ள அணைகள் மற்றும் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

    நீலகிரியில் கோடைக்காலம் தொடங்கும்போது அனல் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு பெய்ய வேண்டிய கோடைமழை தொடங்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு, வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சடசடவென கோடைமழை பெய்ய தொடங்கியது. இது சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

    இதனால் ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.

    இது அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கோடைக்காலம் காரணமாக வனப்பகுதிகள் வறண்டு காணப்படுவதால் அங்கு தற்போது அடிக்கடி வனத்தீ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் ஊட்டியில் கோடைமழை காரணமாக அங்கு தற்போது குளிர்ந்த காற்று வீசுவதுடன் இதமான காலநிலையும் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    Next Story
    ×