என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓபிஎஸ் இருக்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கும், சட்டமன்றத்துக்கும் தொடர்பு இல்லை- சபாநாயகர்
- சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு கூறி உள்ளது.
- நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு கூறி உள்ளது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை நிலைப்பாடு என்ன? என்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறி உள்ளது. அதற்குள் செல்ல விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது. சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழு பொறுப்பாகும்.
ஆகவே, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும், சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






