search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப்கார் வசதி: பட்ஜெட்டில் தகவல்
    X

    திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப்கார் வசதி: பட்ஜெட்டில் தகவல்

    • சென்னையில் உள்ள குறளகம் நவீனப்படுத்தப்படும்.
    • ரூ.60 கோடியில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    நகராட்சி நீர்வளம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.25,858 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மெரினா கடற்கரை, கடலூர் சில்வர் பீச், விழுப்புரம், மரக்காணம், நாகை, ராமேசுவரம் உள்பட 8 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். பிராட்வே பஸ் நிலையம் மேம்படுத்தப்படும்.

    பழங்குடியினரை மேம்படுத்த ரூ.1000 கோடியில் தொல்குடி என்ற திட்டம் அமல்படுத்தப்படும். 2 ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பெரம்பலூர், எறையூர், பாடலூரில் சிப்காட் வளாகத்திற்கு தேவையான நீரை வழங்க கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அயோத்தி தாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்.

    1000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கப்படும். சென்னையில் உள்ள குறளகம் நவீனப்படுத்தப்படும்.

    பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப்கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    சமூக பாதுகாப்பு துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும்.

    கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி உள் நோக்கு இல்லம் அமைக்கப்படும்.

    தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்படும். கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

    உள்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றை திறம்பட செயல்படுத்த பெயர் மாற்றம் செய்யப்படும். நீதியரசர் சந்துரு பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த துறையில் சீர்திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.60 கோடியில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும்.

    சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரியில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும். இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ராமநாதபுரம் பிரப்பன் வலசையில் அமைக்கப்படும்.

    இளைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணர பேச்சு, பாட்டு, இசை, நடனம் என போட்டிகள் நடத்தப்படும். 500 புதிய மின்சார பஸ்கள் வாங்கப்படும்.

    நூலகம், குடும்ப பார்வையாளர்கள் அறை, பூங்கா, மைதானத்துடன் இல்லம் அமைக்கப்படும்.

    இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்து நடந்து 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை உயர்த்தப்படும்.

    தமிழ்நாடு சந்தித்த பேரிடர்களுக்கான நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதிலும் மத்திய அரசு கால தாமதம் செய்கிறது. இயற்கை பேரிடர்களால் தமிழக அரசின் நிதி நிலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ரூ.665 கோடியில் 14 புறவழிச்சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

    தஞ்சை செங்கிப்பட்டி அருகே ரூ.120 கோடியில் 300 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    சிப்காட் பூங்காவில் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல், தோல் அல்லாத காலணிகள் ஆலை அமைக்கப்படும்.

    ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்திடும் சட்டமசோதா நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும்.

    வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் மாநில அரசின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு 3 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

    மதி இறுக்கம் உடையோருக்கான உயர் திறன் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும். பேரிடர்களால் நிதி நெருக்கடியை சந்தித்த போதிலும் வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி அளித்து உள்ளோம்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×