என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து?
- நிரந்தரமாக சின்னங்கள் ஒதுக்குவதற்கு இந்த அங்கீகாரம் அவசியமானது.
- 6 கட்சிகளுக்கு அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
சென்னை:
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் வாங்கிய ஓட்டுகளின் சதவீதத்தின் அடிப்படையில் அக்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி வருகிறது.
நிரந்தரமாக சின்னங்கள் ஒதுக்குவதற்கு இந்த அங்கீகாரம் அவசியமானது. தேர்தலில் 6 சதவீதத்துக்கு கீழ் ஓட்டு வாங்கிய கட்சிகளாக திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கும் மாநில கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்டு கட்சி, மிசோரம் மக்கள் மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கூட்டணி, ராஷ்டீரிய லோக்தளம் பாரத ராஷ்டீரிய சமிதி, ராஷ்டீரிய லோக்தளம் ஆகிய 6 கட்சிகளுக்கு அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதாவது மாநில கட்சி (பிரிவு 6ஏ) என்ற அங்கீகாரத்திற்காக கடந்த பொதுத் தேர்தலில் நிறுத்திய வேட்பாளர்கள் செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 6 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த நோட்டீஸ் சென்றிருந்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் இன்று கட்சி வாரியாக விசாரணையை தொடங்கி உள்ளது. இதில் பா.ம.க. சொல்லும் விளக்கத்தை பொறுத்து அதன் அங்கீகாரம் தொடருமா? என்பது விரைவில் தெரிய வரும்.






