search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விவசாயிகளாக மாறிய போலீசார்: போலீஸ் நிலையத்தை சுற்றி காய்கறி-மூலிகை தோட்டம்

    • புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.
    • விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழகம்-ஆந்திரா எல்லையில் ஆர்.கே.பேட்டை அருகே உள்ளது பொதட்டூர்பேட்டை. மாவட்ட எல்லையின் கடைசி போலீஸ்நிலையம் இங்கு அமைந்து உள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதட்டூர் போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.

    இதனை பயன் உள்ளதாக மாற்ற திட்டமிட்ட போலீசார் அந்த நிலத்தை சீரமைத்து முள்வேலி அமைத்து உள்ளனர். மேலும் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

    இந்த தோட்டத்தில் துளசி, கற்பூரவள்ளி, சிறியாநங்கை, பாகற்காய் , அருகம்புல், ஓமவல்லி, ஆடாதொடை, தூதுவளை, எலுமிச்சை, கருந்துளசி, வாழை, முருங்கை, வள்ளிக்கிழங்கு, கொய்யா, மாமரம், தென்னை மரம், முசுமுசுக்கை, கீழாநெல்லி, வெண்டைக்காய், கத்தரி போன்ற பல்வேறு வகையான மூலிகை, காய்கறி செடிகளையும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொன்னாங்கண்ணி, பசலை, முளைக்கீரை, மணத்தக்காளி, வல்லாரை போன்ற பலவகைக் கீரைகளையும் வளர்த்து வருகின்றனர். இதனால் தற்போது பொதட்டூர் பேட்டை போலீஸ்நிலையத்தை சுற்றிலும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவின் மேற்பார்வையில் போலீசார் தங்களது அன்றாட கடமைகளுடன் இந்த காய்கறி, மூலிகை தோட்டத்தையும் சிறப்பாக கவனித்து வருகிறார்கள். விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    போலீசாரின் இந்த முயற்சிக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், திருத்தணி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஆகியோர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரை பாராட்டி உள்ளனர்.

    இதனால் இந்த போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்கவும், விசாரணைக்கு வருபவர்களும் தங்கள் பிரச்சினைகளை மறந்து, அந்தத் தோட்டத்தை ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். மேலும், தங்களுக்குத் தேவையான மூலிகைகளை அனுமதிபெற்று பறித்துச்செல்கின்றனர்.

    Next Story
    ×