என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை, வேலூர், நீலகிரியில் பிரதமர் மோடி 2 நாள் சூறாவளி பிரசாரம்
    X

    சென்னை, வேலூர், நீலகிரியில் பிரதமர் மோடி 2 நாள் சூறாவளி பிரசாரம்

    • தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்செல்வம், பால்கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.

    வருகிற 9-ந்தேதி (செவ்வாய்) மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசாரம் செய்யும் பிரதமர் மாலையில் கோண்டியாவில் இருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை வருகிறார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் வழியாக ஜி.என்.செட்டி ரோடு வழியாக பனகல் பார்க் வருகிறார்

    ஜி.என். செட்டி ரோட்டில் வேலூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத் தின் முன்பு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் காரில் பனகல் பார்க் சென்றடைகிறார். அங்கிருந்து ரோடு ஷோ தொடங்குகிறது. பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை ரோடு ஷோ நடக்கிறது.

    தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்செல்வம் (மத்திய சென்னை), பால்கனகராஜ் (வடசென்னை) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    ரோடு ஷோ நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். மறுநாள் காலையில் சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர், செல்கிறார். காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.50 மணிக்கு சென்னை வருகிறார். சென்னையில் இருந்து விமானப்படை விமானம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி நீலகிரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    நிகழ்ச்சியை முடித்துவிட்டு கோவை திரும்பும் பிரதமர் மோடி விமானப்படை விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலம் செல்கிறார்.

    சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரை பார்வையிட்டு வரவேற்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் திரளும் இடங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி கட்சியினருடன் ஆலோசித்தார்.

    பிரதமரின் வருகை, சுற்றுப்பயணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை, வேலூர், நீலகிரி மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    Next Story
    ×