search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் 18-ந்தேதி பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ
    X

    கோவையில் 18-ந்தேதி பிரதமர் மோடி பிரமாண்ட "ரோடு ஷோ"

    • பிரமாண்ட ரோடு ஷோ மட்டுமின்றி பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • பிரதமர் மோடி வருகை காரணமாக கோவை மாவட்ட நிர்வாகிகள் உற்சாகமாகி உள்ளனர்.

    கோவை:

    பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை தற்போது தொடங்கி விட்டன.

    பிரதமர் நரேந்திரமோடி பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜனதா தீவிர களப்பணியாற்றி வருகிறது.

    பிரதமர் மோடியும் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

    தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். மேலும் 2 முறை அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார்.

    அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். நாளை கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந் தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பிரதமர் மோடி மற்ற மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று பேசி வந்தார். ஆனால் கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.கவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த ரோடு ஷோவானது சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நடத்தப்பட உள்ளதாகவும், ரோடு ஷோவின்போது பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பிரமாண்ட ரோடு ஷோ மட்டுமின்றி பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்ட பா.ஜ.கவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு, பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோவை எங்கு நடத்தலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் கோவையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தையும் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசித்தனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடுஷோ மற்றும் பொதுக்கூட்டத்தை குறிப்பிட்ட சில இடங்களில் நடத்த தேர்வு செய்துள்ளனர். அந்த இடங்களில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த முடியுமா? பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் வசதிகள் உள்ளனவா? பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பா.ஜ.கவினர் இன்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் முடிவில் குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்து அவர்கள் தலைமைக்கும், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள். பின்னர் அவர்கள் கோவைக்கு வந்து அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்துவார்கள். விரைவில் ஒப்புதல் கிடைத்த பிறகு ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளது.

    பிரதமர் மோடி வருகை காரணமாக கோவை மாவட்ட நிர்வாகிகள் உற்சாகமாகி உள்ளனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு தயாராகி வருகின்றனர். பிரதமர் வருகையையொட்டி போலீசாரும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

    Next Story
    ×