search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வில் மேலும் 1 கோடி பேரை சேர்க்கும் திட்டம்- விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கும் பணி தீவிரம்
    X

    தி.மு.க.வில் மேலும் 1 கோடி பேரை சேர்க்கும் திட்டம்- விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கும் பணி தீவிரம்

    • புதிதாக சேருபவரின் குடும்பத்தில் வேறு யாரும் தி.மு.க.வில் இருந்தால் அது பற்றியும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடலாம்.
    • முக்கியமாக கல்லூரி மாணவ-மாணவிகளை அதிகமாக சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி, தி.மு.க.வில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த பணியை அடுத்த மாதம் 3-ந்தேதி (ஏப்ரல்) தொடங்கி ஜூன் மாதம் 3-ந்தேதிக்குள் உறுப்பினர் சேர்கையை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதையொட்டி உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் தலைமைக் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

    அந்த விண்ணப்பத்தில் உறுப்பினர் பெயர், வயது, தந்தை பெயர், முகவரி, படிப்பு, தொழில் ஆகியவற்றுடன் வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி நம்பர் ஆகியவற்றையும் குறிப்பிடும் வகையில் படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் அளவு புகைப் படம் ஒட்டவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிதாக சேருபவரின் குடும்பத்தில் வேறு யாரும் தி.மு.க.வில் இருந்தால் அது பற்றியும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடலாம். அதற்கேற்ப விண்ணப்ப படிவம் தயாராகி வருகிறது.

    தி.மு.க.வில் ஏற்கனவே 1 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இப்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் முக்கியமாக கல்லூரி மாணவ-மாணவிகளை அதிகமாக சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கல்லூரிகள் இல்லாத இடமாக இருந்தால் வீடு வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிரணியினர் அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்கள் மத்தியில் பேசி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்டச் செயலாளர் கூறுகையில், கடந்த முறை உறுப்பினர் சேர்க்கையின் போது அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக போலியாக உறுப்பினர்களை சேர்த்ததாக கணக்கு காட்டினர்.

    அந்தந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அந்த பெயரில் உறுப்பினர் அங்கு இல்லை என்று தெரிய வந்தது.

    இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் உண்மையான நபர்களை கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    தி.மு.க.வில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாக உள்ளனர். எனவே இப்போது உறுப்பினர்களை சேர்க்கும் போது பெண்களையும் அதிகமாக கட்சி உறுப்பினர்களாக சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    தி.மு.க.வின் பலம் இதன் மூலம் கண்டிப்பாக அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×