search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்... பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்... பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்

    • ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார்.
    • பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. தனது கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது ஒருபுறமிருக்க ஏற்கனவே அறிவித்தபடி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, "பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை இடைக்கால பொது செயலாளர் தீர்மானமாக கொண்டு வருவார். பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பழனிசாமி கொண்டு வருவார்'' என்றார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றும் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கபப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×