என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடகிழக்கு பருவமழை 23-ந்தேதி தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    வடகிழக்கு பருவமழை 23-ந்தேதி தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

    • தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கியதும், தமிழ்நாட்டுக்கு அதிகளவு மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
    • தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி, அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் நிறைவு பெறும். அந்தவகையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான சூழல் நிலவி வருகிறது.

    அதன்படி, இன்னும் ஓரிரு நாட்களில் தெலுங்கானா, மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை விலகும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கியதும், தமிழ்நாட்டுக்கு அதிகளவு மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்கும். அந்தவகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 25-ந்தேதிக்குள் (புதன்கிழமை) தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    அதிலும் இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (புதன்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×