என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழக நீர் நிலைகளில் 193 டி.எம்.சி. நீர் இருப்பு- அதிகாரிகள் தகவல்
    X

    தமிழக நீர் நிலைகளில் 193 டி.எம்.சி. நீர் இருப்பு- அதிகாரிகள் தகவல்

    • சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • செம்பரம்பாக்கம் வரத்து 400 கன அடி, திறப்பு 261 கன அடி மற்றும் வீராணம் வரத்து 201 கன அடியும், திறப்பு 483 கன அடியுமாக உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளின் (நீர்த்தேக்கங்கள்) மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடி (224.297 டி.எம்.சி.) ஆகும். தற்போது, வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில், அனைத்து நீர்த்தேக்கங்களிலும் 1 லட்சத்து 93 ஆயிரத்து 393 மில்லியன் கன அடி (193.393 டி.எம்.சி.) அதாவது 85.40 சதவீதம் இருப்பு உள்ளது.

    தமிழகத்தில் உள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வேலூர் ஆண்டியப்பனூர் ஓடை, மோர்த்தானா, தர்மபுரியில் நாகாவதி, கிருஷ்ணகிரியின் சூளகிரி சின்னாறு, திண்டுக்கல் சிறுமலையாறு ஓடை, வர்தமா நதி, மதுரை சாத்தையாறு, தேனி சண்முகாநதி, சோத்துப்பாறை, விருதுநகரின் சாஸ்தா கோவில், கோவை த.நா.சோலையாறு, ஈரோடு குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம், சேலம் மேட்டூர் ஆகிய நீர்த்தேக்கங்கள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன.

    சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதில் பூண்டி ஏரிக்கு வரத்து 650 கன அடியும், திறப்பு 53 கன அடியுமாக இருக்கிறது. இதேபோல் சோழவரம் வரத்து 177 கன அடி, திறப்பு 3 கன அடி, புழல் வரத்து 373 கன அடி, திறப்பு 292 கன அடியாக இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் வரத்து 400 கன அடி, திறப்பு 261 கன அடி மற்றும் வீராணம் வரத்து 201 கன அடியும், திறப்பு 483 கன அடியுமாக உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் முழுவதும் நிரம்பி உள்ளதால் வரும் 120 கன அடி நீர் முழுவதும் திறந்துவிடப்படுகிறது.

    இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவான 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.), தற்போது 8 ஆயிரத்து 384 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அனைத்து நீர் நிலைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட தகவல்களை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×