search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கழுத்தில் காயங்கள்: புதுப்பெண் சாவில் நீடிக்கும் மர்மங்கள்- கணவரிடம் டி.எஸ்.பி. விசாரணை
    X

    ரமணி

    கழுத்தில் காயங்கள்: புதுப்பெண் சாவில் நீடிக்கும் மர்மங்கள்- கணவரிடம் டி.எஸ்.பி. விசாரணை

    • திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ரமணி இறந்தது குறித்து, அவரது கணவர் சஞ்சய் மற்றும் ரமணியின் தந்தை கருப்புசாமி, சஞ்சயின் தாய், தந்தை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    வடவள்ளி:

    கோவை மத்வராயபுரத்தை சேர்ந்தவர் சஞ்சய் (22). இவரும் செல்வபுரத்தை சேர்ந்த ரமணி (20) என்பவரும் காதலித்து வந்தனர்.

    வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதலர்கள் கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர்.

    இதையடுத்து போலீசார் 2 வீட்டு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரமணி காதல் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தால் அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்த ரமணி, தனது கணவரிடம் தலைவலிப்பதாகவும், சிறிது நேரம் தூங்கி விட்டு வருகிறேன் என தெரிவித்து விட்டு அறைக்கு சென்றுள்ளார்.

    இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை அழைக்க சென்றபோது, அவர் மூச்சு பேச்சின்றி இருந்தார். அதிர்ச்சியான சஞ்சய் மனைவியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு, கழுத்தில் காயங்கள் இருப்பதால், ரமணியின் சாவில் மர்மம் இருக்கிறது.

    இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். அதன் பின்னர் ரமணியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படது.

    திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் இதுகுறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ரமணி இறந்தது குறித்து, அவரது கணவர் சஞ்சய் மற்றும் ரமணியின் தந்தை கருப்புசாமி, சஞ்சயின் தாய், தந்தை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர்களிடம் ரமணி எப்படி இறந்தார். அதற்கான காரணம் என்ன என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டார்.

    ரமணியின் இறப்பில் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர்.

    ஆனால் அவரது கழுத்தில் சிறிது அடி ஆழத்திற்கு பலமான காயமும், கையிலும் தாக்கியதற்கான காயங்கள் உள்ளது.

    இதனால் அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. மேலும் கழுத்து, கைகளில் எப்படி காயம் ஏற்பட்டது என்பதும் புரியாத புதிராக உள்ளது.

    இப்படி புதுப்பெண் சாவில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் இந்த மர்மங்களுக்கு எல்லாம் விடை கிடைக்கும். அதில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது நடந்துள்ளதா? என்பது தெரியவரும்.

    Next Story
    ×