search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடி தீ வைக்க முயன்ற மர்ம நபர்கள்- போலீசார் வலைவீச்சு

    • விஷ்ணு நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
    • மதுபோதையில் யாரேனும் அங்கு நுழைந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை-நாகர்கோவில் ரெயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரெயில்வே கேட் உள்ளது.

    நெடுங்குளம், தாழை குளம், உண்ணங்குளம், அம்பலம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர்.

    இந்த ரெயில்வே கேட்டில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்பவர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் இந்த வழியாக செல்வதால் இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதும், ரெயில்கள் சென்ற பிறகு திறக்கப்படுவதும் வழக்கம்.

    இந்நிலையில் இன்று அதிகாலை விஷ்ணு பணியில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி கேட் கீப்பர் இருந்த அறைக்குள் புகுந்துள்ளனர். அப்போது விஷ்ணுவை அவதூறாக பேசி தாக்க முயன்றதால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனையடுத்து மர்ம நபர்கள் அந்த அறையில் இருந்த 2 தொலைபேசிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கையில் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை அந்த அறையில் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக தீ பற்றாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனே அங்கு விரைந்த ரெயில்வே போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்களை கவிழ்ப்பதற்காக இந்த செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபோதையில் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து ரெயில்வே கேட் கீப்பர் அறைக்குள் தெரியாமல் நுழைந்து விட்டேன். என் மீது வழக்கு போட்டு விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் மதுபோதையில் யாரேனும் அங்கு நுழைந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்த வாலிபரை பிடிப்பதற்காக போலீசார் சாத்தான்குளம் விரைந்து உள்ளனர்.

    Next Story
    ×