என் மலர்
தமிழ்நாடு
கன்னியாகுமரி அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்- போலீசார் விசாரணை
- கடற்கரையில் கிடந்த பேரல் கப்பலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
- ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் பேரல் என்று எழுதப்பட்டு இருந்தது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே முகிலன் குடியிருப்பு கடற்கரை பகுதியில் இன்று காலை மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவல் அந்த பகுதி மக்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர். கடலோர காவல்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கரை ஒதுங்கியது இரும்பு பேரல் என தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
கடற்கரையில் கிடந்த பேரல் கப்பலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பேரலை மீட்டு கன்னியாகுமரியில் உள்ள கடலோர காவல் படை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்ட பேரல், சிறிது துருபிடித்த நிலையில் இருந்தது. ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் பேரல் என்று எழுதப்பட்டு இருந்தது. எனவே அந்த பேரலில் ஆயில் இருக்கலாம் என்று தெரிகிறது. வெளிநாடுகளுக்கு சென்ற கப்பலில் இருந்து தவறி விழுந்த பேரல், கடலில் உள்ள நீரோட்டத்தின் மூலமாக இந்த பகுதியில் ஒதுங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பேரலை திறந்து சோதனை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் அந்த பேரலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் பேரல் கரை ஒதுங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.