என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மிச்சாங் புயல்: ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
- புயல் சேதங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
- சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
சென்னை:
மிச்சாங் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் மிச்சாங் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிட கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (5-12-2023) அன்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய மிச்சாங் புயலால் பெய்த வரலாறு காணாத பெருமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன்காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு. இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிச்சாங் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. முழு விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






