search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை கோர்ட் உத்தரவு
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை கோர்ட் உத்தரவு

    • செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, ‘சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.
    • செந்தில் பாலாஜி ஏற்கனவே ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 16-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருந்துவரும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, 'சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் பணத்தை கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் என கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோர் மூலம்தான் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியால் தற்போது 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. எனவே, அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்' என்றார்.

    அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 'சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான் தவறு செய்யவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக உள்ளார். அவர் சக்தி வாய்ந்த நபராக இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடல்நிலையை ஒரு காரணமாக கூற முடியாது. எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    நீதிபதி தனது உத்தரவில், 'செந்தில் பாலாஜி ஏற்கனவே ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 16-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தவிர வேறு எந்த சூழ்நிலை மாற்றமும் இந்த வழக்கில் ஏற்படவில்லை.

    செந்தில் பாலாஜி தற்போதுவரை அமைச்சராக இருந்து வருகிறார். இதற்கு முன்னதாக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

    செந்தில் பாலாஜி குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பதற்கான நம்பத்தகுந்த காரணங்கள் எதையும் இந்த கோர்ட்டு கண்டறியவில்லை.

    குற்றத்தின் தன்மை கடுமையாக உள்ளது. மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க இயலாது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என கூறி உள்ளார்.

    Next Story
    ×