search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ரத்த ஓவியம் வரைவதற்கு தடை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
    X

    தமிழகத்தில் ரத்த ஓவியம் வரைவதற்கு தடை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

    • ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைவதை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.
    • அன்பை, நட்பை, காதலை வெளிபடுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது.

    திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:

    தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரு புதிய கலாச்சாரம் ஒன்று தலை தூக்கியுள்ளது. ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து விரும்புவர்களுக்கு அனுப்புவது. குறிப்பாக காதலன் காதலிக்கு அனுப்புவது, காதலி காதலனுக்கு அனுப்புவது போன்ற பழக்கம் புதியதாக வந்துக் கொண்டிருக்கிறது. அதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.

    இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே அந்த ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல. உடலில் உள்ள இரத்தத்தை எடுக்கும் போது மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின், அதற்கு தேவையான ஊசியினை முறையாக பயன்படுத்தி ரத்தத்தை எடுத்து, பாதுகாப்பார்கள்.

    ஆனால், ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் என்பது முறையாக பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும். அதோடுமட்டுமல்லாமல் ரத்தம் எடுக்க பயன்படுத்துகின்ற ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது.

    எனவே விதிமுறைகளின்படி இந்த ரத்தம் எடுக்காத நிலையில் அந்த ரத்தத்தை படம் வரைவதற்கு கையாளும்பொழுது, அந்த ரத்தம் எச்.ஐ.வி போன்ற நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது பலரை தாக்கி, பாதிப்பிற்குள்ளாக்கும்.

    எனவே இந்த தகவல் தெரிந்தவுடன் சென்னை வடபழனி மற்றும் தியாகராயநகர் பகுதியில் இருக்கின்ற ரத்த ஓவிய நிறுவனங்களை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். அங்கிருந்து அதற்காக பயன்படுத்தப்படுகின்ற ரத்த குப்பிகள், ஊசி, வரைந்து வைத்திருந்த படங்களை எல்லாம் பறிமுதல் செய்து, அவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது.

    இதோடு இந்த தொழிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் நிறுவனம் அல்லது கடைகளுக்கு சீல் வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓவியத்தை வரைவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றது, ரத்தத்தை எடுத்துதான் வரைய வேண்டும் என்றில்லை.

    ரத்தம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே இந்த ரத்த ஓவிய நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப் படுகிறது. இதை யாராவது மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இளைஞர்கள் ரத்த ஒவியத்தின் மீது ஆர்வம் காட்டக்கூடாது, மேலும் இதை வரையும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அன்பை பரிமாறிக்கொள்வதற்கு, நட்பை வெளிப்படுத்திக்கொள்வதற்கு, காதலை வெளிபடுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது, ரத்த ஓவியம் வரைந்துதான் அதனை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×