search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தின் தலைநகராக திருச்சி இருப்பதுதான் சரியாக இருக்கும்: அமைச்சர் துரைமுருகன்
    X

    தமிழகத்தின் தலைநகராக திருச்சி இருப்பதுதான் சரியாக இருக்கும்: அமைச்சர் துரைமுருகன்

    • ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு.
    • இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள்.

    திருச்சி:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி-கரூர் பைபாஸ்சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, கல்வெட்டை திறந்து வைத்து, கொடியை ஏற்றி வைத்தார்.

    இதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. அணிகளுக்கான கருத்துரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    100 அடி உயர கொடிக்கம்பத்தை முதன்முதலில் இங்கு பார்த்து அசந்து போனேன். ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு. இது கலைஞரின் ரத்தத்தில் உருவான கொடி என பலமுறை பேசி உள்ளேன். 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி பறப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தி.மு.க. முதன்முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்ட இடம் திருச்சி தான். திருச்சியை தலைநகராக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். விரும்பினார். எனக்கு அ.தி.மு.க. பிடிக்காவிட்டாலும், அந்த கருத்து பிடித்து இருந்தது.

    இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள். இந்தியாவின் தலைநகரம் ஐதராபாத்தில் தான் இருக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தின் தலைநகரம் மத்தியில் தான் இருக்க வேண்டும். அதற்கு திருச்சி தான் சரியாக இருக்கும். அப்படியும் ஒரு காலத்தில் நிகழும். தி.மு.க.வுக்கு வந்த சோதனைகள் போல் மற்ற கட்சிகளுக்கு வந்து இருந்தால், இந்நேரம் அந்த கட்சிகள் அழிந்து போய் இருக்கும்.

    தி.மு.க. தொண்டர்கள் தான் கட்சியின் காவல் தெய்வங்கள். எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி தி.மு.க.தான். தற்போதைய தி.மு.க. தலைமை வருங்கால தலைமையை உருவாக்குமானால், அந்த தலைவரையும் எனது தோள் மீது வைத்து தாங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

    Next Story
    ×