search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தில் விரைவில் மெகா சோதனை
    X

    தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தில் விரைவில் மெகா சோதனை

    • தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது
    • குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். இந்த பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை ஆகியவையும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதே நாளில் சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளும் சென்னை மாநகரை குறி வைத்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள் சிலரை குறி வைத்து அவர்களது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக விரைவில் பெரிய அளவிலான மெகா சோதனையை நடத்த அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனையை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் இந்த சோதனையை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தேர்தல் நேரத்தில் இது போன்ற சோதனைகளை நடத்துவதன் மூலமாக பாராளுமன்ற தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பு உருவாகும் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் அவ்வப்போது நடைபெறும் அமலாக்கத்துறை, வருமானவரி துறை சோதனைகளே பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் பெரிய அளவில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையை நடத்தினால் அது தேர்தல் களத்திலும் நிச்சயம் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது எப்போதுமே சோதனைகள் என்பது ஏதாவது ஒரு கண்ணோட்டத்தில் நடத்தப்படுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அதே நேரத்தில் குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை. இதற்கு முன்பும் பலமுறை ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா சோதனை என்பது நடத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் எந்தவித திட்டமிடலும் இல்லாமலேயே ஒவ்வொரு முறையும் திடீரென சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×