search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கே.பி.முனுசாமி ரூ.1 கோடி கேட்டார்... ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட பகீர் ஆடியோ
    X

    கே.பி.முனுசாமி ரூ.1 கோடி கேட்டார்... ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட பகீர் ஆடியோ

    • கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்
    • ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் அரங்கில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சி தலைமைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். தேர்தல் முடியும்வரை இரு தரப்பினரும் அமைதியாக இருப்பார்கள் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.

    சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்வது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டன் போன்று ஓ.பன்னீர்செல்வத்தால் உண்மையாக உழைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள கே.பி.முனுசாமி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், அவர் தொடர்பான ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில், கே.பி.முனுசாமியிடம், ரூ.50 லட்சம் இப்போது ரெடி, 50 லட்சம் பின்னர் தருகிறேன் என கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.

    இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்று கே.பி.முனுசாமி கூறினார். என்னைப்போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

    ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன்.

    அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே எடப்பாடி அணியில் இருக்கிறார். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு அவர் பணம் கேட்கிறார். தொண்டர்களிடமும் பணம் வசூலிக்கிறார்.

    இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

    Next Story
    ×