search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்- வாகன ஓட்டிகள் தவிப்பு
    X

    கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்- வாகன ஓட்டிகள் தவிப்பு

    • குறைந்த அளவிலான போக்குவரத்து போலீசாரே பணியில் ஈடுபட்டதால் வாகன நெரிசலை சரிசெய்யமுடியவில்லை.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விற்பனையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    போரூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல முக்கிய சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி பூஜை பொருட்கள் விற்பனைக்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நள்ளிரவு முதலே வரத்தொடங்கின.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டி உள்ள காளியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4மணி முதலே வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க புறநகர் பகுதிகளில் இருந்து வந்த பெரும்பாலான வியாபாரிகள் குறித்த நேரத்திற்குள் திரும்பி செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர். இதேபோல் மதுரவாயல் சாலை முழுவதுமே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுரவாயல் சாலையில் இருந்து மார்க்கெட் நோக்கி செல்லும் வாகனங்களை நேராக செல்ல அனுமதிக்காமல் பூந்தமல்லி சாலையில் திருப்பிவிட்டனர். இதனால் அந்த வாகனங்கள் மேம்பாலத்தில் சுற்றி வந்து 100 அடி சாலைவழியாக வந்தது. ஏற்கனவே கோயம்பேடு 100 அடி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றன.

    கோயம்பேடு சிக்னலில் இருந்த சின்மயாநகர் பாலம் வரை சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதேபோல் வெளியூர்களில் இருந்து வந்த ஆம்னி பஸ்களும் வந்ததால் கோயம்பேடு பகுதி முழுவதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தன். நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து சென்றனர். குறைந்த அளவிலான போக்குவரத்து போலீசாரே பணியில் ஈடுபட்டதால் வாகன நெரிசலை சரிசெய்யமுடியவில்லை. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அருகில் உள்ள சந்து, தெருக்களில் புகுந்து சென்றனர். இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறும்போது, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்காடி நிர்வாக குழு மூலம் பண்டிகை பொருட்கள் விற்பனைக்கு முறையான மாற்று ஏற்பாடு ஏதும் செய்யவில்லை. இதன் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விற்பனையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை மார்க்கெட்டுக்கு வர வேண்டிய பொருட்கள் முழுமையாக வந்து சேரவில்லை என்றனர்.

    Next Story
    ×